நல்ல புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்
நல்ல புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வலியுறுத்தல்
பாடப் புத்தகங்களைத் தாண்டி நல்ல புத்தகங்களை வாசிக்க மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.
பள்ளிகள் திறக்கப்பட்ட பின், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கால அட்டவணை ஆகியவை பள்ளி திறக்கப்படும் நாளன்றே கற்றல், கற்பித்தல் பணிகளை ஆசிரியர்கள் தொடங்க வேண்டும். பணிப் பதிவேட்டை முதல் நாளே பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
வாசிப்புப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி: பாடக் குறிப்பேடுகள் வாரத்தின் முதல் நாளே தலைமை ஆசிரியர் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் பள்ளி திறக்கும் நேரத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக வர வேண்டும். நீதிபோதனை வகுப்புகளின்போது வேறு பாடங்களை கற்பிக்கக் கூடாது. மாணவர்களின் திறன்களை அறிந்து வாசிப்புத் திறன், நல்ல கையெழுத்துத் திறன் ஆகியவற்றை வளர்க்கும் வகையில் தினமும் மாணவர்களுக்கு வாசிப்புப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
வாசிப்பை ஊக்குவித்தல்: ஆசிரியர்கள் பாடப் பொருளை நன்கு புரியும்படி செய்முறை விளக்கங்களோடு கற்பிக்க வேண்டும். நூலகங்களைப் பயன்படுத்த மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். தினமும் செய்தித்தாள் வாசிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். வகுப்பறையில் செல்லிடப்பேசிகளை பயன்படுத்தக் கூடாது. தகுதியுள்ள மாணவர்களுக்கு உதவித் தொகைகளை உரிய நேரத்தில் வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி மாணவர்களின் விவரக் குறிப்புகளைத் தனியாகப் பராமரிக்க வேண்டும். பள்ளிக்குத் தொடர்ச்சியாக வராத மாணவர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.