இ’ கிரேடு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி!
தமிழகத்தில், ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவக்கல்விமுறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது
. இதில், மூன்று பருவ தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்கள், பள்ளி சார்ந்த செயல்பாடுகள், சுற்றுச்சூழல் செயல்பாடுகள், விளையாட்டு திறன், தனித்திறன் உள்ளிட்டவை அடிப்படையில், கிரேடு வழங்கப்படுகிறது. இதில், ஏ, பி, சி. டி, இ என, ஐந்து கிரேடுகள் வழங்கப்படுகிறது.
இதில், எட்டாம் வகுப்பு முடித்து, ஒன்பதாம் வகுப்பு செல்லும் மாணவ, மாணவியரில், இ கிரேடு எடுத்துள்ள மாணவர்களின் பெயர்களை சேகரித்து, இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பில், இ கிரேடு நிலையில் உள்ள மாணவர்களுக்கு, மே மற்றும் ஜூன் மாதத்தில் குறைதீர் கற்பித்தல் பயிற்சி நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:
எட்டாம் வகுப்பில், கற்பித்தலில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள், ஒன்பதாம் வகுப்புக்கு செல்லும் போது, மிகவும் தடுமாற்றம் அடைகின்றனர். உதாரணமாக தமிழில் எழுத படிக்க வராத மாணவர்கள், தமிழ் வழியில் படிக்கும் அனைத்து பாடங்களிலும், கற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
இதை தவிர்க்க, குறைந்த பட்ச கற்றல் திறன் அடையும் அளவுக்கு, அம்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மே மூன்றாவது வாரத்தில் துவங்கி, ஜூன் மாதம் வரை, இப்பயிற்சி வகுப்பு நடைபெற வாய்ப்புள்ளது. இ கிரேடு மாணவர்களின் பட்டியல்களை, இயக்குனரகத்துக்கு மே, 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.