மருத்துவ 'கட் - ஆப்' கூடும் இன்ஜி.,க்கு குறையும்
பிளஸ் 2 தேர்வில், 'சென்டம்' எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதால், மருத்துவ படிப்பு, 'கட் - ஆப்' அதிகரிக்கவும், இன்ஜி., படிப்பு, கட் - ஆப் குறையவும் வாய்ப்புள்ளது.
பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு, இயற்பியலில், ஐந்து பேர் மட்டுமே, சென்டம் பெற்றுள்ளனர். இயற்பியல் வினாத்தாள் இந்த ஆண்டு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். ஆனால், அனைத்து பாடங்களையும் விட, இந்த பாடத்தில், சென்டம் எண்ணிக்கை குறைந்துள்ளது.
வேதியியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர், பெற்றோர், ஆசிரியர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்த பாடத்தில் கடந்த ஆண்டை விட கூடுதலாக, 1,703 பேர், சென்டம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, 1,049 பேர் தான் சென்டம் பெற்றனர்.தாவரவியலில் கடந்த ஆண்டு, 75 பேர், இந்த ஆண்டு, 20 பேர்; விலங்கியலில், கடந்த ஆண்டில், நான்கு பேர்; இந்த ஆண்டு, 10 பேர் சென்டம் பெற்றுள்ளனர்
உயிரியலை பொறுத்தவரை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். ஆனால், கடந்த ஆண்டில், 387 பேர்; இந்த ஆண்டில், 775பேர் சென்டம்பெற்றுள்ளனர்.இதன்படி பார்த்தால், இந்த ஆண்டு இன்ஜி., மற்றும் மருத்துவ, கட் - ஆப் மதிப் பெண்ணில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என, தெரிகிறது.
இதுகுறித்து கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:சென்டம் எண்ணிக்கையை கணக்கிடும் போது, மருத்துவத்திற்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படவில்லை என்றால், இந்த ஆண்டு மருத்துவத்திற்கு பிளஸ் 2 மதிப்பெண்ணில், 0.25 அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 197.5 ஆகவும், உயர் பிரிவினருக்கு, 198 ஆகவும் இருக்கும்.இன்ஜி., படிப்புக்கு, கடந்த ஆண்டை விட, கட் - ஆப் மதிப்பெண் குறையவே வாய்ப்புள்ளது.ஏனென்றால், சென்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை, இன்ஜி., பாடங்களில் குறைந்துள்ளது.கணிதத்தில் கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு;இயற்பியலில்,23 மடங்கு, சென்டம் எண்ணிக்கை குறைந் துள்ளதால், ஒரு மதிப்பெண் வரை, கட் - ஆப் குறையலாம்.இவ்வாறு அவர் கூறினார்.