கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: துணைவேந்தர் அறிவிப்பு
தமிழகத்தில் ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு (பி.வி.எஸ்.சி.), பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம், பி.டெக். பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய நான்கு படிப்புகளில் சேருவ
தற்கு வெள்ளிக்கிழமை (மே 20) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் கூறினார்.
எத்தனை இடங்கள்?: கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு 320 இடங்கள், பி.டெக். உணவு தொழில்நுட்பப் படிப்புக்கு 20, பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பப் படிப்புக்கு 20, பி.டெக். பால்வளத் தொழில்நுட்பப் படிப்புக்கு 20 என மொத்தம் 380 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (மே 20) காலை 10 மணி முதல் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது.
ஆகஸ்ட் மாதம் கலந்தாய்வு: இது தொடர்பாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 300 ஆகும். பிற பிரிவினர் ரூ. 600 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு கால்நடை மருத்துவப் படிப்புக்கு 16 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை முதல் வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் முதல் அல்லது 2-ஆவது வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும் என்றார் அவர்.