'கல்வி தகவல் மேலாண்மை முறையை, இணையதளத்தில் மேம்படுத்தும் முறையை, மே 12ம் தேதிக்குள் முடிக்காவிட்டால், சென்னை இயக்குனரகம் செல்ல வேண்டியிருக்கும்' என, மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி பள்ளிகளில் உள்ள மாணவர்களின் விவரங்களை தொகுத்திடும் வகையில், கல்வி தகவல் மேலாண்மை முறை (எமிஸ்) கடந்த, 2012-13ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. தற்போது, பள்ளி மாறிய மாணவர்கள் மற்றும் புதிதாக சேர்ந்த மாணவர்களின் விவரங்களை அப்டேட் செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில், ஆசிரியர்களை பள்ளிக்கு வர வைத்து, இப்பணிகளை தலைமை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். சர்வர் கோளாறு, மாணவர்களின் விவரங்களை சேகரிப்பதில் உள்ள குளறுபடி உள்ளிட்டவற்றால், அப்பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், மே 12ம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும். அதன் பின் சர்வரில் அப்டேட் செய்ய முடியாது. எனவே, பணிகளை முடிக்காத தலைமை ஆசிரியர்கள், நேரடியாக இயக்குனர் அலுவலகத்துக்கு சென்று, அப்பணிகளை செய்ய வேண்டியிருக்கும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, எச்சரிக்கை விடுத்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பணிகளை முடிக்க முடியாமல் தவிக்கும் தலைமை ஆசிரியர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.