MBBS., விண்ணப்பத்தில் குளறுபடி?பதிவு எண் குழப்பம்; மாணவர்கள் தவிப்பு
எம்.பி.பி.எஸ்., விண்ணப்ப படிவத்தில், பதிவு எண் எழுதுவது தொடர்பாக குளறுபடி ஏற்பட்டுள்ளதால், பெற்றோர், மாணவர் குழப்பம் அடைந்துள்ளனர். மத்திய அரசின், அவசர சட்டம் காரணமாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில்
மாணவர் சேர்க்கை சிக்கல் தீர்ந்ததால், தமிழகத்தில், மே, 26 முதல், அரசு மருத்துவகல்லுாரிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
மாணவர்களும் ஆர்வமுடன் விண்ணப்பங்கள் பெற்று வருகின்றனர்.விண்ணப்ப படிவங்களில், பதிவு எண் எழுத, எட்டு எண்களை எழுதும் வகையில் கட்டங்கள் தரப்பட்டுள்ளன. ஆனால், மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் தரப்பட்டுள்ள நிரந்த பதிவு எண், 10 இலக்கங்கள் உடையதாக உள்ளது. மேலும், தேர்வுக்கான பதிவு எண் என, ஆறு இலக்க எண் தரப்பட்டுள்ளது. இதில், எந்த எண்ணை எழுதுவது என, தெரியாமல் மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறியதாவது:விண்ணப்ப படிவத்தில் பதிவு எண் கட்டத்தில், மாணவர் தேர்வு எழுத பயன்படுத்திய, தேர்வு முடிவுகளை பார்க்க பயன்படுத்திய, 'ரோல் எண்' என்ற பதிவுஎண்ணைத் தான் எழுத வேண்டும்.
இது, மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, ஆறு இலக்கங்களும்; சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட மாணவர்களுக்கு, எட்டு இலக்கங்களும் கொண்டதாக இருக்கும்.மாணவர்கள் எந்த குழப்பமும் அடைய வேண்டாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் உள்ள, 10 இலக்க நிரந்த பதிவு எண்ணை இதற்கு பயன்படுத்த வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.