தேர்வுநிலை பதவி உயர்வுக்கு 10-ம் வகுப்பு உண்மைத்தன்மை சான்று அவசியமா?

தேர்வுநிலை பதவி உயர்வுக்கு 10-ம் வகுப்பு உண்மைத்தன்மை சான்று அவசியமா?- கல்வித்துறை அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி:
தமிழகத்தில் போலி ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்த சர்ச்சை காரணமாக, தேர்வுநிலை தகுதி பெறக்
காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு, 10-ம் வகுப்பு முடித்ததற்கான உண்மைத் தன்மை சான்று அவசியமென கூறப்பட்டுள்ளது.
உடனடியாக இந்த சான்றை எப்படிப் பெறுவது என ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 2003-2004 கல்வியாண்டில் தொகுப்பூதிய அடிப்படையில் 40,000 இளநிலை, முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். முதுநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4500, இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.4000 என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் வந்த திமுக அரசு 40,000 ஆசிரியர்களை 2006, ஜூன் மாதம் நிரந்தரமாக்கியது.
ஊதிய உயர்வு வழங்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.இந்நிலையில், நிரந்தர ஊழியர்களாக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள், தற்போது 10 ஆண்டு கால பணியை நிறைவு செய்திருப்பதால், அதில் ஏராளமானோர் தேர்வுநிலை தகுதிக்கு காத்திருக்கின்றனர். தேர்வுநிலை என்ற பதவி உயர்வு பெறுவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வரும் 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஆனால், ‘போலியான ஆசிரியர்களைக் களையெடுக்கும் நோக்கில், இதுவரை கேட்கப்படாத ஆவணங்கள் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளன. ஒரு வார இடைவெளியில் அந்த ஆவணங்களை தயார் செய்வது சிரமம். இதனால் பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என’ ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.கலையாசிரியர் சங்கத் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: தேர்வுநிலை பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள், தாங்கள் 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், உண்மைத்தன்மை சான்றை இணைக்க வேண்டும் என்பது வழக்கமான நடைமுறை. 
இதை மனதில் வைத்து ஏராளமான ஆசிரியர்கள் 12-ம் வகுப்பு உண்மைத்தன்மை சான்றை பெற்று, தேர்வு நிலைக்கு விண்ணப்பிக்கத் தயாராக இருந்தனர். ஆனால், திடீரென 10-ம் வகுப்புக்கான உண்மைத்தன்மை சான்றையும் இணைக்க வேண்டும்என விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளனர். 10-ம் வகுப்புக்கான உண்மைத்தன்மை சான்றிதழ் பெற வேண்டுமானால்,தனியே விண்ணப்பித்து மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் (ஜூன் 22-க்குள்) தேர்வுநிலை பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதால், ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே இந்த ஆண்டு பழைய முறைப்படி, தேர்வு நிலைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும். 10-ம் வகுப்பு படித்ததற்கான சான்றைசமர்ப்பிக்க வேண்டும் என ஆசிரியர்களைக் கட்டாயப் படுத்தக்கூடாது.
7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் விரைவில் நடைமுறைக்கு வருமெனக் கூறப்படுவதால், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினைகளினால் ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை பதவி உயர்வு தள்ளிப்போனால்,ஊதிய உயர்வு பலன்கள் கிடைப்பதும் சிரமம் என்றார்.
கொள்கை முடிவுக்கு உட்பட்டது
இது குறித்து கல்வித்துறையினர் கூறும்போது, ‘ஒரு சில மாவட்டங்களில் தகுதியற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஒரு சில இடங்களில் போலி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஆய்வு மாநிலம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒருபகுதியாக, தேர்வு நிலை பதவி உயர்வுக்கு விண்ணப்பிப் பவர்களது, கல்வித்தகுதியை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு நிலைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு கொடுக்கப்பட்டது. மேலும் கால நீட்டிப்பு என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது’ என்றனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)