பி.இ., ௨ம் ஆண்டு சேர்க்கை கவுன்சிலிங் 29-ல் தொடக்கம்
காரைக்குடி;பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங் காரைக்குடியில் வரும் 29-ம் தேதி தொடங்கி ஜூலை 9-ல் முடிகிறது.
பாலிடெக்னிக் டிப்ளமோ, பி.எஸ்.சி., முடித்தவர்கள் பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர கவுன்சிலிங் காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரியில் வரும் 29-ம் தேதி தொடங்கி ஜூலை 9-ல் முடிகிறது. விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
16,143 விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டதில், 14,785 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன. சிவில் பிரிவுக்கு 3,425 , மெக்கானிக்கல் பிரிவுக்கு 5,914, எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு 5,182, கெமிக்கல் டெக்னாலஜிக்கு 140 , டெக்ஸ்டைல் பிரிவுக்கு 79,லெதர் டெக்னாலஜிக்கு 8, பிரிண்டிங் டெக்னாலஜிக்கு 12, பி.எஸ்.சி., முடித்தவர்கள் 13 , இதர பிரிவினர் 12 பேர் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அதே போல், இந்த ஆண்டும் ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் ராஜ்குமார் கூறும்போது: சிறப்பு பிரிவினருக்கு மட்டுமே அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மற்றவர்கள் www.accetlea.com என்ற இணையதளத்தில் சென்று, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள யூசர் ஐ.டி., பாஸ்வேர்டு மூலம் அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு 1500 பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட உள்ளனர். ஆறு கால அளவாக கவுன்சிலிங் நடக்கிறது. ஒரு கால அளவு ஒன்றரை மணி நேரமாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாள் கவுன்சிலிங் முடிந்ததும், கல்லுாரியில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை இணையதளத்தில் உடனே வெளியிடப்படும். இன்ஜி., கல்லுாரி வளாகத்தில் இலவச வைபை வசதி செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கவுன்சிலிங் நடக்கும், என்றார். உடன் ஒருங்கிணைப்பாளர் கணேசன், துணை முதல்வர் இளங்கோ இருந்தனர்.
----------மாணவர்கள் கொண்டு
வர வேண்டியவை
--------பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்,
பட்டயபடிப்பு மதிப்பெண், பட்டபடிப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், மாற்று சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், இருப்பிடம், முதல் பட்டதாரி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் இருந்தால் கொண்டு வரலாம். கலந்தாய்வுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக வரவேண்டும். தரவரிசைக்கு பின் சான்றிதழ் சரி பார்க்கப்படும்.ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டபின் மாற்றப்பட இயலாது. கலந்தாய்வு அறைக்குள் அலைபேசி அனுமதி கிடையாது. மறு மதிப்பீட்டில் மாற்றம் இருப்பின் அதன் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.