மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் : ஆய்வு அறிக்கை அளிக்க அரசுக்கு 2 மாத 'கெடு'


சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, இரு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்காவிட்டால், பள்ளிக் கல்வித் துறை செயலர், செப்., 2ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்' என, சென்னைஉயர்
நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை, மணலி, சடையான்குப்பம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டட கூரை, சீரமைப்புப் பணியின் போது இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒரு மாணவனும், ஒரு மாணவியும் காயமடைந்தனர். கடந்த, 2014ல் நடந்த இச்சம்பவத்தில், காயமடைந்த மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்ற அமைப்பின் சென்னை பிரிவு செயலர் வி.கார்த்திகேயன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவர் தாக்கல் செய்த மனு: அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், குடிநீர், கழிப்பறை, கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, தமிழக அரசு, 2012ல் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை. 

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 313 பள்ளிகள் உள்ளன. இங்கு, 1.17 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இப்பள்ளிகளுக்கு, மாநகராட்சி நிதி ஒதுக்குகிறது. இந்தநிதி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்த பயன்படுத்தப்படுவதில்லை. எனவே, பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான அரசாணை அமல்படுத்தப்படுகிறதா என, ஆய்வு செய்ய நிரந்தர குழுவைஅமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசாணை அமல்படுத்தப்பட்டது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, பள்ளிக் கல்வித் துறை இணைச் செயலர் டி.ராஜேந்திரன் தலைமையில் குழு ஒன்றை நியமித்து, 2014 ஆகஸ்டில் உத்தரவிட்டது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழுத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், 2016 மார்ச்சில் பணி ஓய்வு பெற்று விட்டதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு அமல்படுத்தப்படவில்லை; எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. இணை இயக்குனர் ராஜேந்திரன் ஓய்வு பெற்று விட்டதாக காரணம் கூறப்படுகிறது. ராஜேந்திரன், இணை இயக்குனர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால், குழுத் தலைவர் அந்தஸ்து பறிபோய்விடாது. பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வை, இரண்டு மாதங்களுக்குள் முடித்து விடுவதாக, பள்ளிக் கல்வித் துறை செயலர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது; இது ஏற்கப்படுகிறது. இரு மாதங்களுக்குள் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், பள்ளிக் கல்வித் துறை செயலர், செப்., 2ல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை, செப்., 2க்கு தள்ளி வைத்தனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank