ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மீள் திறன் மாணவர் சிறப்பு திட்டத்தில்(எலைட்) பயின்ற அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 10 பேர் மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 450க்கும் அதிகமாக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளிமாணவர்கள் உயர்கல்வி பெறும் நோக்கில் சில ஆண்டுகளுக்கு முன் அப்போதைய கலெக்டர் நந்தகுமார் ஏற்பாட்டில்
மீள்திறன் மாணவர் சிறப்பு பயிற்சி வகுப்பு(எலைட்) துவங்கப் பட்டது. ராமநாதபுரம் நகராட்சி வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளியில் நடந்த எலைட் வகுப்பில் பயின்று 2014--15 கல்வி ஆண்டில் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் தலா இரண்டு மாணவர் தகுதி பெற்றனர். 2015--16 கல்வி ஆண்டில் இங்கு பிளஸ் 2 பயின்ற 10 மாணவ, மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் ஆயிரத்து 100 மதிப்பெண்களுடன் மருத்துவ படிப்பில் சேர 'கட் ஆப்' பெற்றனர். மனோஜ்குமார், செல்வ பாண்டி ஆகியோருக்கு சென்னை மருத்துவக் கல்லுாரியிலும், நஸ்ரினுக்கு தஞ்சை அரசு மருத்துவ கல்லுாரியிலும், இலக்கிய எழிலரசி, சூர்யபிரகாஷூக்கு மதுரை அரசு மருத்துவக்கல்லுாரியிலும், கார்த்திக்கிற்கு நெல்லை அரசு மருத்துவ கல்லுாரியிலும் சேர சீட் கிடைத்தது. சுர்ஜித், மகேஷ்குமார், கோகிலா, சரீதா ஆகியோருக்கு இன்று நடக்கும் கவுன்சிலிங்கில் சீட் உறுதியாக கிடைக்கும் என, எலைட் பள்ளி சிறப்பு ஆசிரியர் நவநீதகிருஷ்ணன் கூறினார்.