பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படாது:
பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படாது: அண்ணா பல்கலை. முடிவு
பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் நிகழாண்டில் வெளியிடப்படாது என அண்ணா பல்கலைக்கழக
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2014, 2015 ஆகிய இரு ஆண்டுகளிலும் தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட பல்கலைக்கழகம் இந்த முறை தரவரிசை பட்டியலை வெளியிடப்போவதில்லை எனத் தெரிவித்திருப்பது மாணவர்கள், பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
527 பொறியியல் கல்லூரிகள்: நாட்டிலேயே மிக அதிக பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 2016-17ஆம் கல்வியாண்டு புள்ளிவிவரத்தின்படி, தமிழகத்தில் மொத்தம் 527 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு அதிக எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகள் கிடையாது.
இதற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிரத்தில் 372 பொறியியல் கல்லூரிகளும், ஆந்திரத்தில் 328 பொறியியல் கல்லூரிகளும், உத்தரப் பிரதேசத்தில் 296 பொறியியல் கல்லூரிகளும், தெலங்கானாவில் 284 பொறியியல் கல்லூரிகளும், மத்தியப் பிரதேசத்தில் 211 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. மற்ற மாநிலங்களில் 200-க்கும் குறைவான பொறியியல் கல்லூரிகளே உள்ளன.
தமிழகத்திலுள்ள அதிக எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகள் இருப்பதால், தரமான பொறியியல் கல்வியைத் தரக் கூடிய கல்லூரியைத் தேர்வு செய்வது ஒவ்வொரு ஆண்டும் மிகப் பெரிய சவாலாக மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இருந்து வருகிறது.
பிரபல பொறியியல் துறைகளில் இடம் கிடைக்க பல லட்சம் ரூபாய் நன்கொடை வசூல், 100 சதவீத வேலைவாய்ப்பு உத்தரவாதம் என அறிவித்துவிட்டு பணிக்குச் சேர்ந்த 6 மாதத்துக்குப் பின் வீட்டுக்கு அனுப்பப்படும் நிலை என பல்வேறு வகைகளில் பொறியியல் மாணவர்கள் ஏமாற்றப்படுவதும் தொடர்தையாகி வருகிறது.
தனியார் பொறியியல் கல்லூரிகளின் இந்த மோசடிகளில் இருந்த தப்பிக்க, சேரப்போகும் கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்வது, பல்கலைக்கழக இணையதளத்தில் அந்தக் கல்லூரி விவரங்கள், பேராசிரியர்களின் கல்வித் தகுதி விவரங்களை அறிவது, கல்லூரி முன்னாள் மாணவர்களிடம் விசாரிப்பது போன்ற முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டே முடிவு செய்யவேண்டும் என்கின்றனர் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.
இதில் ஒரு வழிதான் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையிலான கல்லூரி தரவரிசைப் பட்டியல்.
கடந்த ஆண்டுகளில்...: 2014-15ஆம் கல்வியாண்டிலும், 2015-16ஆம் கல்வியாண்டிலும் பொறியியல் சேர்க்கைக்கு முன்னதாக இந்த தரவரிசைப் பட்டியலை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.
இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. கல்லூரிகளைத் தரம் பிரிக்க ஓரளவுக்கு பயனுள்ளதாக இருந்ததாக பெற்றோரும், மாணவர்களும் தெரிவித்தனர். இதுபோல, 2016-17ஆம் கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கு முன்னதாக, மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் கல்லூரிகளின் வரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடப் போவதில்லை என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தயக்கம் காட்டுவது ஏன்? இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறியது:
நீதிமன்ற உத்தரவின் காரணமாகவே, கடந்த இரண்டு ஆண்டுகளும் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விவரங்கள் வெளியிடப்பட்டன.
எனவே, நிகழாண்டில் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விவரங்கள் எதுவும் வெளியிடப்படமாட்டாது என்றனர்.
இந்த நிலையில், கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பதில் ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகம் தயக்கம் காட்டி வருவது ஏன் என கல்வியாளர்களும், பேராசிரியர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.