ஓ.பி., அடிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு'செக்'
அரசு பள்ளிகளில் பணிக்கு வராமல், ஓ.பி., அடிக்கும் ஆசிரியர்களின் விவரங்களை திரட்ட, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவதுடன், பல பள்ளிகளில் மாணவர்கள் சேராமல் புறக்கணிக்கும் நிலை உள்ளது.இதற்கு பள்ளிகளின் உள்கட்டமைப்பில் எந்த பிரச்னையும் இல்லை
.
ஆனால், ஆசிரியர்களின் வருகை, அவர்களின் கற்பித்தல் முறை, ஆசிரியர்களுக்கான கற்பித்தல் அல்லாத பணிகள் போன்றவையே காரணம் என தெரியவந்துள்ளது.
சொந்தப்பணி
இதற்கிடையில், அரசு பணிகள் தவிர, ஆசிரியர்கள், தங்கள் பணி நேரத்தில், பள்ளிக்கு கட் அடித்து விட்டு, சொந்த பணியை பார்க்க செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது.எனவே முதற்கட்டமாக, ஆசிரியர்களை அந்த பள்ளிகளில் உரிய நேரத்தில் பணியில் இருக்க வைக்க தேவையான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. அதன்படி, ஒவ்வொரு நாளும் ஆசிரியர்களின் வருகை குறித்தும், விடுமுறை குறித்தும் பட்டியல் எடுக்க, மாவட்ட தொடக்க மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் எடுப்பதில், கல்வித்துறை அல்லாத பள்ளிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பிரச்னையை போக்க, பிற்பட்டோர் நலத்துறை, உள்ளாட்சி துறை, வனத்துறை, ஆதி திராவிடர் நல துறை, பழங்குடியினர் நலத்துறை ஆகியவற்றின் பள்ளிகள் அனைத்தும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன.
குறுஞ்செய்தி
இந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஒவ்வொரு நாளும் தங்கள் பள்ளி ஆசிரியர்களின் வருகை, ஆப்சென்ட் குறித்த தகவலை, காலையில் மொபைல்போனில் குறுஞ்செய்தியாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.