படிக்கும் காலங்களில் சுயக் கட்டுப்பாடு வேண்டும்: மாணவர்களுக்கு கு.ஞானசம்பந்தன் அறிவுரை:
படிக்கும் காலங்களில் சுயக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அடக்க முடியாத மனதை கூட அடக்கி ஆள முயல வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.
கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா நேற்று நடைபெற்றது. விழாவில், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசியதாவது:
புதிய அத்தியாயத்தை கல்லூரியில் தொடங்க உள்ளீர்கள். பிறரைச் சார்ந்து இருந்த நீங்கள் இனி உங்களைச் சார்ந்து வளர வேண்டிய பருவம். கல்லூரி வாழ்க்கை சினிமாவில் வருவது போல் அல்ல, சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணமே கல்லூரிக் காலம்.
எச் செயலையும் மிக வேகத்துடன் செய்வதுடன் விவேகமாகவும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது சோதனைகள் பல நம்முன் வரும். சோதனைகளை எதிர் கொண்டு சாதனைகளாக்க கடும் முயற்சி எடுக்க வேண்டும். எவ்வாறு வாழ வேண்டும் என்பதை இன்றே தீர்மானியுங்கள்.
கலை அறிவியல் கல்லூரியில் படித்தவர்கள் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் சாதனைகள் புரிந்து வருகின்றனர். எந்தப் படிப்பையும் ஏளனமாகக் கருதாமல், ஆர்வத்துடன் முக்கியத்துவம் கொடுத்துப் படித்தால் சிறப்பாகப் படிக்க முடியும். தமிழைப் படிக்கப்போகிறோம் என்று எண்ணாமல், அக்கரையுடன் படித்தால் இத் தமிழ் நம்மை புகழின் உச்சிக்கு உயர வைக்கும். தமிழைப் பாடமாக எடுத்தவர்கள் தாயகம் மட்டுமின்றி உலகெங்கும் பறந்து வருகின்றனர்.
படிக்கும் காலங்களில் சுயக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அடக்க முடியாத மனதை கூட அடக்கி ஆள முயல வேண்டும். மனதை அடக்கிய மாணவர்கள் மாயச் சூழலை அடக்கி வாழ்கின்றனர். மனக் கட்டுப்பாடு நல் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகும்.
நல்ல சூழ்நிலை, நட்புறவு நமது வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலையிருந்தால் ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கும். படிக்கும் காலங்களில் பல பரிசுகளை வாங்குங்கள். படித்த பின்னர் பிறருக்கு பரிசுகளை வழங்கும் நிலைக்கு வாருங்கள். எல்லா சக்திகளும் நம்மிடம் உள்ளன. எனவே எதையும் தன்னம்பிக்கையுடன் செய்தால் வாழ்க்கையில் உயர முடியும். இவ்வாறு அவர் பேசினார்.