இன்று சர்வதேச யோகா தினம்:நாடு முழுவதும் ஒரு லட்சம் நிகழ்ச்சிகள்
புதுடில்லி,: சர்வதேச யோகா தினம், இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், இதற்காக, நாடு முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.'யோகா பயிற்சிகள் மூலம் ஏற்ப
டக்கூடிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா தினம், ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும்' என,ஐ.நா., சபை அறிவித்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, இந்த முடிவை, ஐ.நா., சபை அறிவித்தது.
அதன்படி, சர்வதேச முதல் யோகா தினம், கடந்த ஆண்டு உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இந்தியா, உலகிற்கு அளித்த கொடையான யோகாவின் புகழை, உலகளவில் பிரபலப்படுத்தும் வகையில், மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.இரண்டாம் ஆண்டாக, இன்று, சர்வதேச யோகா தினம் கொண்டாப்படுகிறது.இதற்காக, நாட்டின் பல பகுதிகளில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளன. 'இந்த நாளில், விடுமுறை ஏதுவும் அளிக்கப்படாது. நாடு முழுவதும் உள்ள, 50 லட்சம் அரசு ஊழியர்கள், விருப்பம் இருந்தால், யோகா தின விழாவில் பங்கேற்கலாம்' என, மத்திய அரசு விளக்கம்அளித்துள்ளது. யோகா தினத்தையொட்டி, நாடு முழுவதும் ஒரு லட்சம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வாரணாசி, லக்னோ, ஜம்மு, இம்பால், பெங்களூரு, விஜயவாடா, வதோதரா உள்ளிட்ட, 10 இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். மற்ற பகுதிகளில் நடக்கும் விழாக்களில், மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.இதுதவிர, 361 பல்கலைக் கழகங்கள், 16 ஆயிரம் கல்லுாரிகள், 12 ஆயிரம் பள்ளிகளில், சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
பல்கலையில்யோகா துறை
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைஅமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், ''யோகா தினம் கொண்டாடப்படும் நிலையில்,கேரளா உட்பட, ஆறு மத்திய பல்கலைக் கழகங்களில், யோகா கலை மற்றும் அறிவியல் துறை துவங்கப்படும். இதன் மூலம், யோகா தொடர்பான, டிப்ளமோ முதல், பி.எச்டி., ஆராய்ச்சி படிப்பு வரை,பல்வேறு வகுப்புகள் நடத்தப்படும்,'' என்றார்.
ஐ.நா.,வில் கொண்டாட்டம்
யோகா தினத் தை கொண்டாட, ஐ.நா., சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அமெரிக்காவின், நியூயார்க் நகரில் உள்ள, ஐ.நா., தலைமை அலுவலக கட்டடத்தில், யோகா தின முத்திரை, மின்னொளியால்ஒளிர்கிறது. பெண் ஒருவர், யோகா செய்வது போன்ற காட்சி, அதில் இடம் பெற்றுள்ளது. அங்கு நடக்கும் விழாவில், ஈஷா அமைப்பின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், பிரிட்டிஷ் பாடகி தான்யா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அமெரிக்கா, பிரிட்டன் உட்பட, ஐ.நா.,வின் உறுப்பு நாடுகளிலும், யோகா தினத்தை சிறப்புடன் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.