அரசு பள்ளிகளில் கலைக்கப்படும் என்.சி.சி., படை?


         தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே, தேசிய மாணவர் படை எனப்படும் என்.சி.சி.,யில் சேர முடியும் என்பதால், அதன் செயல்பாடு, கூடாரத்துடன் காலியாகி வருகிறது.


              மத்திய அரசின் தேசிய மாணவர் படை என்ற தன்னார்வ திட்டம், ராணுவம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்கு தனியாக ராணுவ அதிகாரிகள், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் போன்றோர் நியமிக்கப்பட்டு, மாவட்ட வாரியாகவும், மண்டல வாரியாகவும் நிர்வாகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் இந்த திட்டம் அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், தனியார் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. இதில், 13 வயது பூர்த்தியான அல்லது, 9ம் வகுப்பு மற்றும், 10ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் தலா, 50 பேர் கொண்ட, இரண்டு முதல் நான்கு படைகள் அமைக்கப்பட்டு, அதற்கு தனியாக உடற்கல்வி பயிற்சியாளர் அல்லது ராணுவத்தில் பயிற்சி முடித்து ஆசிரியரானவர் அல்லது உடற்கட்டு கொண்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியளிக்கப்படுகின்றனர். பயிற்சிக்கு பின், அவர்கள் தங்கள் பள்ளியின் படையை நடத்துவர். முன்பெல்லாம் என்.சி.சி.,யில் சேர மாணவர்களுக்கு இடம் கிடைக்காத சூழல் ஏற்படும். ஆனால், சமீப காலமாக என்.சி.சி.,க்கான மவுசு குறைந்து ஒவ்வொரு பள்ளியிலும் என்.சி.சி., படையை கலைத்து வருகின்றனர். இதற்கு என்.சி.சி., மாணவர்களிடம் வசூல் வேட்டை நடத்துவதே முக்கிய குற்றச்சாட்டாக கூறப்படுகிறது. மத்திய அரசின் நிதியில் மாநில, 'டெபுடி டைரக்டர் ஜெனரல்' மூலம், மாநில பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் மேற்பார்வையில் என்.சி.சி., நடத்தப்படுகிறது.
இதில் இடம் பெறும் மாணவர்களுக்கு, இலவசமாக, இரண்டு காக்கி பேன்ட், சட்டை, 'ஷூ, பெல்ட்' மற்றும் தொப்பி வழங்கப்படும். ஆனால், தற்போது இதற்காக மாணவர்களிடம் மறைமுகமாக பணம் வசூலிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில், இரண்டு, 'செட்'டுக்கு பதில், ஒரு, 'செட்' மட்டும் வழங்கப்படுகிறது. மற்றொன்றை தனியாக கடைகளில் வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர். இதேபோல், மாணவர்களிடம், 'ரெஜிமண்ட் பண்ட்' என, ஆண்டுக்கு, 150 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும், பொது சேவைக்கான முகாம்கள், வருடாந்திர பயிற்சி போன்றவற்றிற்கும் மாணவர்களிடமே கட்டணம் பெறப்படுகிறது. அதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள வசதி குறைந்த மாணவர்கள், பணமின்றி பயிற்சி முகாமுக்கு செல்லாமலும், என்.சி.சி., அணிவகுப்புக்கே வராமலும் புறக்கணிக்கின்றனர்.
இந்த காரணங்களால், படையை விட்டு விலகும் மாணவர்களிடம், நான்கு ஆண்டுகள் வரை, 'ரெஜிமண்ட் பண்ட்' வசூலிக்கப்படுவதால், அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல பள்ளிகள் என்.சி.சி., படைகளை கலைத்து விட்டதால், தமிழகத்தில் என்.சி.சி., படை எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது. தனியார் பள்ளிகள் மட்டும் தங்கள் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து படைகளை நடத்தி வருகின்றன.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)