இன்ஜி., கவுன்சிலிங்: பெற்றோர் பங்கேற்கலாம்
அண்ணா பல்கலையில், இன்ஜி., கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. மாணவர்களுக்கு பதில் பெற்றோர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்குக்கான தரவரிசை பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் முதன் முறையாக, 'ஆன்லைன்' வழியே அழைப்பு கடிதம் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை தபாலில் தான் கடிதங்கள் அனுப்பப்பட்டன. இந்த ஆண்டுடன் தபால் வழி அழைப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அழைப்பு கடிதத்தில், கவுன்சிலிங்கில் மாணவர் பங்கேற்பது குறித்த விதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி,
அனைத்து மாணவர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்துக்கு, இரண்டு மணி நேரத்துக்கு முன், பல்கலை வளாகத்திற்கு வந்து விட வேண்டும்
கவுன்சிலிங் அறையில் மாணவருடன் பெற்றோர் ஒருவர் மட்டுமே பங்கேற்க வேண்டும்
கவுன்சிலிங்குக்கு மாணவர் வர முடியவில்லை என்றால், மாணவரின் அங்கீகார கடிதத்துடன் பெற்றோர் பங்கேற்கலாம். அதற்கு மாணவரின் அடையாள அட்டையுடன் கூடிய ஆவணங்கள், சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும். பெற்றோர் தேர்வு செய்யும் கல்லூரி, பாடப்பிரிவை மாணவர் மாற்ற முடியாது குறிப்பிட்ட நாளில் மாணவர் வர முடியாமல், அவரது பிரதிநிதியும் வராவிட்டால், மாணவர் தனக்கு வசதியான மற்றொரு நாளில் வரலாம். ஆனால், அவர்கள் பங்கேற்கும் நாளில் உள்ள தர வரிசைப்படியே இடங்கள் கிடைக்கும்; முந்தைய தரவரிசை கிடைக்காது கவுன்சிலிங்குக்கு முன் வேறு கல்லூரிகளில் சேர்ந்து, அங்கு அசல் சான்றிதழ்கள் இருந்தால், அந்த கல்லூரியின் முதல்வர், தலைவரின் அங்கீகார கடிதம் பெற்று, அவற்றின் நகல்களை கொண்டு வர வேண்டும். ஆனால், அசல் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகே, அசல் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். இவ்வாறு நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.