மரம் வளர்ப்போம்; ஆக்சிஜனை பெறுவோம்: இன்று உலக சுற்றுச்சூழல் தினம்


ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர் அளவு ஆக்சிஜனை சுவாசிக்கிறான். ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் விலை 700 ரூபாய். மூன்று சிலிண்டர்களின் விலை ரூ. 2100. ஒரு ஆண்டு கணக்கு பார்த்தால் ரூ.7, 66,000 மதிப்பிலான ஆக்சிஜனை சுவாசிக்கிறான். மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 ஆண்டுகள் என்றால் ரூ.5 கோடி
மதிப்பிலான ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

இவ்வளவு மதிப்பு மிக்க ஆக்சிஜனை மரங்கள்தான் நமக்கு இலவசமாக தருகிறது.மரங்கள் இருப்பதால்தான் மனித இனமும் பிற உயிரினங்களும் பூமியில் வாழ்கின்றன. அப்படியானால் மரங்களுக்கு எந்தளவிற்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும். மரங்கள் இயற்கை தந்த பொக்கிஷம் என்பதை அனைவரும் உணர வேண்டும். ஒரு மரம் தன் வாழ்நாளில் ஆயிரம் கிலோ கார்பன்டை ஆக்சைடை கிரகித்து கொள்கிறது. பல ஆண்டுகளாக நாடு வறட்சியை சந்தித்து வருகிறது.வறட்சி எதனால் ஏற்படுகிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். நம் முன்னோர்கள் காலத்தில் சரியான அளவில் மழை பெய்து வந்தது. அதனால் வீடு, காடு, ரோடு என கண்ணுக்கு எட்டும் துாரம் எங்கும் மரங்கள் வளர்ந்தன. ஆனால் இன்றைய நிலை காடு தோறும் பிளாட், கட்டடங்கள், தொழிற்சாலைகளாக மாறி விட்டதால் மரங்களை அழித்து நமக்கு நாமே தீங்கு செய்கிறோம்.நம் வசதிக்காக ரோடுகளை அகலப்படுத்துகிறோம் என்ற போர்வையில் அங்கிருந்த எண்ணிலடங்கா மரங்களை வெட்டி விட்டோம். மறுபுறம் கழிவுகளாலும், எரிபொருள் மாசுகளால் பூமியை ஒவ்வொருவரும் மாசு படுத்தி வருகிறோம். மாசுபடுத்துவதால் எண்ணற்ற நோய், தொந்தரவுகளை நாம் சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நாம் உயிர் வாழ்வதற்கு உணவு பயிர்களை விளைவிக்கும் விளை நிலங்கள் படிப்படியாக விஷமாக மாறி வருகிறது. இதற்கு காரணம் நீர்நிலைகள் முறையாக பராமரிக்காதது, ஆக்கிரமிப்புகளே.

உதாரணத்திற்கு திருத்தங்கலை சுற்றி பெரியகுளம், உறிஞ்சிகுளம், செங்குளம், பாப்பான்குளம், கடம்பன்குளம் என பெரிய, பெரிய கண்மாய்கள் உள்ளன. செங்குளம் கண்மாய்க்கு மழை நீர் வரக்கூடிய கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.மழை நீர் போக்கு பாதை மாறி விட்டது. கண்மாய்க்குள் வீடுகளின் கழிவு நீர் கலக்கிறது. மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்து துார்நாற்றம் வீசுகிறது. இதில் மீன் வளர்ப்பு என கூறி இறைச்சி கழிவுகளை தினமும் கொட்டுகின்றனர். பாலிதீன் குப்பையோடு இறைச்சி கழிவுகளும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. முன்பு இதமான ஈரக்காற்று வீசிய செங்குளம் கண்மாய் பகுதி தற்போது துர்நாற்றம் வீசி முகத்தை மூடி செல்ல வேண்டியஅவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.கண்மாய்களை காப்பாற்ற இதில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். மாற்று பாதையில் கழிவுநீரை கொண்டு சென்று சுத்திகரித்து துாய நீராக கண்மாய்க்குள் அனுப்பினால் நீர் ஆதார உயிரினங்கள் வாழ தகுந்த இடமாக மாறும். கண்மாய்கள் துர்நாற்றம் இன்றி இருந்தால் பொதுமக்கள் இளைப்பாற கண்மாய் பக்கம் வருவார்கள். அரசும் இதை கவனத்தில் கொண்டுசுற்றுலா தலமாக மாற்றி படகு சவாரிஏற்படுத்தலாம்.

தேவையாகுது கழிவு நீர் சுத்திகரிப்பு

சுரேஷ் (திருத்தங்கல்): சுற்றுச்சூழல் மாசுபடுவதை ஒருவரால் தடுக்க முடியாது. மக்களும் அரசும் இணைந்து முயற்சிக்க வேண்டும். கண்மாய்களுக்கு மழைநீர் வரக்கூடிய கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றி சீரமைக்க வேண்டும். தீப்பெட்டி ஆலை கழிவு, இறைச்சி கழிவுகளை நேரடியாக வாறுகாலில் விடுவதை நிறுத்த வேண்டும். திருத்தங்கல் கண்மாய்களை பாதுகாக்க தனியார் பங்களிப்புடன் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கலாம்.சுத்திகரிக்கப்பட்ட நீரை குளங்களில் சேமித்தால் நிலத்தடி மாசுவை குறைக்கலாம்.

இதையும் பின்பற்றலாமே...

* ஒவ்வொரு ஆண்டும் உலகில் 50,000 கோடி பாலிதீன் பைகள் விற்பனை ஆகின்றன. இவைகள் மண்ணில் மக்காது. அதனால் பயன்படுத்திய பாலிதீன் பைகளை வீசி எறியாமல் சேமித்து முறையாக பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தலாம்.
* நம் நாட்டில் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு தலா அரை கிலோ குப்பையை உருவாக்குகிறோம். இந்த குப்பை எல்லாம் ஊரில் ஏதோ ஒரு இடத்தில் மலைபோல் தேங்குகிறது. இதை உரமாக்க அரசு துறை முன்வரலாம்.
* தனி நபர் வாகனம் ஒவ்வொரு 5 கி.மீ.,க்கு ஒன்றரை கிலோ கார்பன்டை ஆக்சைடை வெளியிடுகிறது. அடிக்கடி வாகனங்களை எடுத்து செல்லாமல் நடந்து செல்லலாம். அல்லது சைக்கிளில் செல்லாம். பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்துக்களை பயன்படுத்தலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)