சாதி சான்றிதழலிலும் ஆதார் எண்!
பள்ளி மாணவர்களுக்கு, ஆதார் எண்ணுடன் இணைத்து, ஜாதி மற்றும் இருப்பிட சான்றிதழ்களை அளிக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
கல்வி சலுகை, கல்வி உதவித்தொகை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கிடைப்பதில் உள்ள சிக்கல்களை தவிர்க்கும் வகையில், இந்த உத்தரவை, மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு, கல்வி உதவித்தொகை, கல்வி சலுகைகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கிடைக்க, ஜாதி சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் தேவைப்படுகிறது.இதை, மாநில அரசுகளே மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
ஐந்தாவது அல்லது எட்டாவது வகுப்பில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து, அந்த வகுப்பில் படிக்கும், மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும், இந்த சான்றிதழை அளிக்க வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்கள்அல்லது நிர்வாகிகள் மூலம், இதற்கான விவரங்களை சேகரித்து, அதிகபட்சம், 60 நாட்களுக்குள் இந்த சான்றிதழை மாநில அரசுகள் வழங்க வேண்டும். மேலும், 'ஆன்லைன்' மூலமாகவும், இந்த தகவல்களை பெறும் வசதியை அறிமுகம் செய்ய வேண்டும்.
மாணவர்களின் ஆதார் எண்ணுடன், இந்த தகவல்களை இணைக்க வேண்டும்; சான்றிதழிலும் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். இதை ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநிலங்களுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.