அரசு இசைப் பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசு பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி, சின்ன காஞ்சிபுரம் சதாவரத்தில் இயங்கி வருகிறது. இப் பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான குரலிசை (பாட்டு), நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், மிருதங்கம், வயலின் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி வகுப்புகள் வார நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப் பயிற்சியில் சேரலாம். பயிற்சி காலம் மூன்று ஆண்டுகள். தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு கட்டணம் இல்லை. சேர்க்கைக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 120 மட்டும் செலுத்த வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை, மாதந்தோறும் ரூ. 400 கல்வி உதவித் தொகை ஆகியவை வழங்கப்படும்.
இசைப் பள்ளியில் சேர்க்கைக்கு விண்ணப்பம் பெற தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப் பள்ளி, சதாவரம் சாலை, காஞ்சிபுரம் 631 502 எனும் முகவரியில் நேரிலோ அல்லது சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை இணைத்து அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரம் வேண்டுவோர் இசைப் பள்ளி அலுவலகத்தை 044-27268190 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.