பள்ளிகளின் அருகே கிணறுகள் தலைமை ஆசிரியர்களுக்கு 'கெடு'
பள்ளிகள் அருகே அமைந்துள்ள கிணறுகளை அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு ஒருவார கால கெடு விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் முதல் தேதி துவங்கியது. பள்ளிக்கல்வித் துறை தற்போது மாணவர்களின் நலன் மற்றும் பள்ளிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறது.
பள்ளித் திறப்பையொட்டி ஏற்கனவே கழிவறைகளை சுத்தம் - சுகாதாரமாக வைக்க உத்தரவிட்டது. தற்போது அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம், 'கழிவறைகளை சுகாதாரமாக வைப்பதுடன், பள்ளி அருகே ஆபத்தான நிலையில் உள்ள கிணறுகளை மூடி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதனை ஒருவார காலத்திற்குள் செயல்படுத்த வேண்டும்' என, அவகாசம் கொடுத்து உத்தரவிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விஷயங்களை முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் இவற்றை வலியுறுத்த வேண்டும். இதுபற்றிய விபரத்தை மின்னஞ்சலில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும் என, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் மாலா மணிமேகலை பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், “பள்ளிகள் அருகே ஆபத்தான நிலையில் கிணறுகள் இருந்தால் அவற்றை ஒருவார காலத்தில் அகற்றி அதுபற்றிய விபரத்தை அறிக்கையாக தரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.