புற்றுநோயை உருவாக்கும் பாலிதீன் பை உணவு
புற்றுநோய், மலட்டுத் தன்மை போன்றவற்றை உருவாக்கும் அபாயகர நச்சுப்பொருள்களை வெளிப்படுத்தும் பாலிதீன் பைகளில், சுடச்சுட குழம்பு, தேநீர் போன்ற உணவுப் பொருள்களைக் கட்டுவதற்கு தடை விதித்து அரசு கடும் நட
வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் "அங்கிங்கெனாதபடி எங்கெங்கும்' பிளாஸ்டிக் பொருள்கள் நிறைந்திருக்கின்றன.
குறிப்பாக, உணவகங்களில் அனைத்து உணவுப் பதார்த்தங்களையும் பாலிதீன் பைகளில் கட்டித் தருவதன் நீட்சியாக- அண்மைக்கால புதுமை- தேநீர்க் கடைகளில் காபியும், பாலும், தேநீரும் பாலிதீன் பைகளில் கட்டித் தருகிறார்கள்.
பாக்கெட் குடிநீரின் மாதிரியாக இதைக் கொள்ளவும் முடியும். ஆனால், அந்தப் பாக்கெட்டுகளில் இருக்கும் எச்சரிக்கையைப் பொருள்படுத்த மறந்துவிட்டோம். "சூரிய ஒளி படாமல்' வைத்திருக்கச் சொல்கிறார்கள். அதன் பொருள் வேறொன்றுமில்லை. சூரிய ஒளி பட்டால், பாலிதீன் உற்பத்திப் பொருள்களில் கலந்துள்ள ரசாயனங்கள் தண்ணீருடன் கலக்கும்.
இந்தப் பின்னணியில்தான் தற்போது உணவுப் பொருள்கள் எளிதாகவும், கெüரவமாகவும் பாலிதீன் பைகளில் கட்டப்படுவதைப் பார்க்க வேண்டியுள்ளது.
பகல் வேளையில் சாப்பாடு வாங்கினால் சைவக் கடைகளில் சாம்பார், காரக் குழம்பு, ரசம், மோர், கூட்டு, பொரியல் அனைத்தும் தனித்தனி பைகளில் கட்டித் தரப்படுகிறது. அசைவக் கடைகளில் கூடுதலாக இரு குழம்புகள்!
அரிசிச் சோறு பெரும்பாலும் பாலிதீன் தாள், வாழைத் தாள் (காகிதம்) ஆகியவற்றிலும், அரிதாக வாழை இலைகளிலும், பட்டர் தாள்களிலும் கட்டித் தரப்படுகிறது.
சுடச்சுட சாப்பிட்டுப் பழகியவர்களுக்காகவும், கூட்டத்தையும், கட்டும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் நோக்கிலும், முற்பகல் 11.30- மணிக்கெல்லாம் அனைத்து வகையான குழம்புகளும் பார்சலாகிவிடுகின்றன.
ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்கு முன்பாக பொட்டலமாகிவிடும் இந்த வகைகளில் இருக்கும் சூட்டால் பாலிதீன் பைகளில் உள்ள ரசாயனங்கள் உணவில் கலப்பதை மறுக்கவியலாது.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கூறியதாவது:
பாலிதீன் பைகள் சூடானால், அவற்றிலிருந்து "ஸ்டைரீன்', "பிஸ்பெனால் ஏ' போன்ற ரசாயனங்கள் வெளியாகும். இவை இரண்டும் புற்றுநோயை உருவாக்கும் தன்மையைக் கொண்டவை.
மேலும், பாலிதீன் பைகளில் இருந்து வெளியாகும் "பாலிவினைல் குளோரைடு', "பாலி ஸ்டைரீன்' ஆகியவை ஆண்- பெண் இரு பாலருக்கும் மலட்டுத் தன்மையை உருவாக்கும் தன்மையைக் கொண்டவை.
அரசு இதைக் கவனமாகப் பரிசீலித்து, தேவைப்பட்டால் மருத்துவ நிபுணர் குழு அமைத்து சோதனை மேற்கொண்டு அவற்றின் மூலம் சூடான பொருள்களை பாலிதீன் பைகளில் கட்டுவதைத் தடை செய்து உத்தரவிட்டால் மட்டுமே மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார்கள்.
புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் புற்றுநோய் வரும் துயரமும், குழந்தைப் பேறுக்காக மருத்துவமனைகளில் நிற்கும் நீண்ட வரிசையும் இவற்றால்தான். தமிழக அரசு இதுவிஷயத்தில் விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.