அண்ணாமலைப் பல்கலை. எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புக்கான சமவாய்ப்பு எண் நம்பர் வெளியீடு

அண்ணாமலைப் பல்கலை. எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புக்கான சமவாய்ப்பு எண் நம்பர் வெளியீடு: ஜூலை 1-ல் கவுன்சிலிங் தொடக்கம்.

          சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் (MBBS) மற்றும் பல்மருத்துவம் (BDS) படிப்பிற்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) இன்று வெளியிடப்பட்டது.

           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் 2016-17ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மற்றும் கையேடு விற்பனை கடந்த ஜூன் 8-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

             விண்ணப்ப விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 20-ம் தேதி வரை ஆன்லைன்மூலம் பெறப்பட்டன. பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் 150 பேரும், பிடிஎஸ் படிப்பில் 80 பேரும் மாணவ, மாணவியர்கள் தனி கலந்தாய்வு மூலம் அனுமதி சேர்க்கை செய்யப்படவுள்ளனர். எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கு 4906 விண்ணப்பங்களும், பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கு 1079 விண்ணப்பங்களும் வரப்பெற்றன.  அவற்றில் 276 மருத்துவ விண்ணப்பங்களும், 52 பல் மருத்துவ விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண்களை (ரேண்டம் எண்) திங்கள்கிழமை பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தில் துணைவேந்தர் செ.மணியன் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் கே,ஆறுமுகம், சிண்டிகேட் உறுப்பினர்கள் கானூர் பாலசுந்தரம், எஸ்.டி.பூங்குன்றன், மருத்துவப்புல முதல்வர் டாக்டர் என்.சிதம்பரம், கடல்வாழ் அறிவியல் புல முதல்வர் கே.கதிரேசன், தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் எஸ்.புகழேந்தி, பல்மருத்துவப்புல முதல்வர் வி.கிருஷ்ணன்,வேளாண்புல முதல்வர் கே.ரவிச்சந்திரன், பொறியியல் புல முதல்வர் சி.ஆண்டணி ஜெயசேகர், மாணவர் சேர்க்கை பிரிவு ஆலோசகர் பேராசிரியர் தி.ராம்குமார், மக்கள்-தொடர்பு அலுவலக மேலாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

           பின்னர் துணைவேந்தர் செ.மணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:  இந்த ஆண்டு   எம்பிபிஎஸ் 150 இடங்களும், பிடிஎஸ் 80 இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கை செய்யப்படுவார்கள்.மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in.-ல் தங்களது “சமவாய்ப்பு” எண்ணை (Random Number) தெரிந்து கொள்ளலாம். ஜூலை 1-ம் தேதி ரேங்க் எண் (தரவரிசை) பட்டியல் வெளியிடப்படும். முதல் வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகஅரசு இடஒதுக்கீடு விதிப்பட்டியும், மாணவர்கள் மேல்நிலைப்பள்ளி அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல்தயார் செய்யப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு 3% சதவீதஇடங்கள் தமிழக அரசின் விதிப்படி ஒதுக்கப்படும்.

           கலந்தாய்வு அட்டவணை மற்றும் கலந்தாய்வுக்கான அனுமதி கடிதத்தை தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணைய தளத்தில் (www.annamalaiuniversity.ac.in)   ஜூலை முதல் வாரத்தில் பதிவிறக்கம் செய்து கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.  மேலும் மாணவர்களுக்கு தனியாக கலந்தாய்வு கடிதம் அனுப்பப்படமாட்டாது.அனுமதி சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அவர்கள் பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள். 

          மாணவர்கள் கலந்தாய்விற்கான அழைப்பு கடிதத்தை பல்கலைக்கழகக இணையதளத்தில் www.annamalaiuniversity.ac.in மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் auadmission2016@gmail.com என்ற முகவரியிலும், மைய தொலைபேசி எண்கள் 04144-238348, 238349 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)