சித்தா, ஆயுர்வேதம்: நாளை முதல் விண்ணப்பம்
தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான, விண்ணப்ப வினியோகம் நாளை துவங்குகிறது. ஒரு மாதம் வரை விண்ணப்ப வினியோகம் தொடரும்
.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, முதற்கட்ட கலந்தாய்வு முடிந்து விட்டது. சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, இதுவரை விண்ணப்பம் வழங்கப்படாததால், இந்த படிப்புகளில் சேர ஆர்வமுடன் காத்திருந்த மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர். இது குறித்து, சமீபத்தில், நமது நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில், 'இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நாளை துவங்கும்' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
அவகாசம் எதுவரை?
இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
விண்ணப்ப கட்டணம், 500 ரூபாய்; சிறப்பு பிரிவினருக்கு, 100 ரூபாய். ஜூன், 28 முதல், ஜூலை, 28 வரை விண்ணப்பம் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூலை, 29க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தாமதமாக வரும்...அஞ்சல் துறை, கூரியர் நிறுவனங்களில், குறித்த நாட்களுக்கு முன் தேதியில் பதிவு செய்திருந்தாலும், கால தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. மேலும், விவரங்களுக்கு, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
என்னென்ன படிப்புகள்?
பி.எஸ்.எம்.எஸ்., எனப்படும் சித்தா
பி.ஏ.எம்.எஸ்., என்ற ஆயுர்வேதா
பி.யு.எம்.எஸ்., என்ற யுனானி
பி.என்.ஓய்.எஸ்., என்ற நேச்சுரோபதி மற்றும் யோகா
பி.எச்.எம்.எஸ்., என்ற ஓமியோபதி என, ஐந்து இந்திய மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் உள்ளன.
விண்ணப்பங்கள் கிடைப்பது எங்கே?
சென்னை அரும்பாக்கம், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லுாரிகள்
சென்னை அரும்பாக்கம் யுனானி மருத்துவக் கல்லுாரி, யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரி
மதுரை திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லுாரி
நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரி. இந்த ஆறு மருத்துவக் கல்லுாரிகளிலும், அலுவலக நேரத்தில் விண்ணப்பம் வழங்கப்படும்