'டியூஷன் எடுக்கும் ஆசிரியருக்குநல்லாசிரியர் விருது கிடையாது'
அரசு பள்ளி ஆசிரியர்கள், 'டியூஷன்' எடுத்தாலோ, தனியார் பள்ளிகளில் பணிபுரிந்தாலோ, அவர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடையாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.ஆசிரியர் தினமான, செப்., 5ம் தேதி, மாவட்டத்திற்கு, தலா, ஆறு அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும்.
இந்த ஆண்டு, விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை, மாவட்ட குழு மூலம் தேர்வு செய்து,ஆக., 8ம் தேதிக்குள் அனுப்பி வைக்க,முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார்.இதில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், கல்வி மாவட்டத்திற்கு,ஆறு ஆசிரியர்களும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், கல்வி மாவட்டத்திற்கு, ஆறு பேரும், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில்மண்டலத்திற்கு, ஆறு பேரும் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தேர்வுக்கு, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம்:கடந்த ஆண்டு, செப்., 30ம் தேதிக்கு முன் ஓய்வு பெற்ற ஆசிரியரை தேர்வு செய்யக்கூடாது. முறைகேடு புகார்கள்இருந்தாலோ, ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவராக இருந்தாலோ, அவரது பெயரை சேர்க்க கூடாது.
பள்ளிக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் வந்து, நேரம், காலம் பாராது பணியாற்றுபவராக இருக்க வேண்டும். மாணவர்கள் நெஞ்சார நேசிக்கக்கூடிய ஆசிரியராக இருக்க வேண்டும்.தனிப்பயிற்சி என்ற, 'டியூஷன்' எடுப்பவராகவோ, கல்வியை வணிகரீதியாக கருதி, தனியார் பள்ளிகளில் பணிபுரிபவராகவோ, நிர்வாகியாகவோ இருக்க கூடாது. இந்த விதிகளை மீறி, ஆசிரியர்களை தேர்வு செய்யும் அலுவலர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது