செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு

சென்னை: மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு மையத்தின் சார்பில் வழங்கப்படும் தொல்காப்பியர் விருது எழுத்தாளர் சோ.ந.கந்தசாமிக்கு வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக செம்மொழி ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதை கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.
தமிழியல் சார்ந்த இலக்கியம், இலக்கணம், மொழியியல், மொழி பெயர்ப்பு, வரலாறு, நுண்கலைகள், கட்டடவியல், தொல்பொருளியல், நாணயவியல், கல்வெட்டியல், சுவடியியல், பண்பாடு முதலிய துறைகளில் ஆய்வு செய்து செம்மொழித் தமிழுக்குத் தலைசிறந்த பங்களிப்பை செய்து வரும் சிறந்த அறிஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
2013-14 ஆம் ஆண்டுக்குக்கான செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி தொல்காப்பியர் விருது முனைவர் சோ.ந.கந்தசாமிக்கு வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையும் அவருக்கு வழங்கப்படும்.
கந்தசாமி இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் புலமை பெற்றவர். 45 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், பிற கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். ஐம்பதுக்கும் அதிகமான ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் மெய்ப்பொருள் சிந்தனைகளை இந்தியத் தத்துவச் சிந்தனைகளுடன் ஒப்பிட்டு இந்தியத் தத்துவத்துக்கு தமிழின் பங்களிப்பை விளக்கியுள்ளார்.தொல்காப்பிமும் சங்க இலக்கியமும் என்ற பொருண்மையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இளம் அறிஞர் விருது
2013-14 ஆம் ஆண்டுக்கான 30 முதல் 40 வயது வரையுள்ள இளம் அறிஞர் விருதுகள் முனைவர் உல.பாலசுப்பிரமணியன், முனைவர் கலை.செழியன், முனைவர் சோ.ராஜலட்சுமி, முனைவர் த.மகாலக்க்ஷ்சுமி, முனைவர் சௌ.பா.சாலவாணிஸ்ரீ ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ. ஒரு லட்சத்துக்கான பரிசுத் தொகையும், நினைவுப் பரிசும், சான்றிதழமும் வழங்கப்படும்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் அவர்களால் இந்த விருதுகள் வழங்கப்படும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank