ஜிப்மர் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவக்கல்லூரி நுழைவுத் தேர்வு முடிவுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.
ஏ. அசோக் ஆனந்து கூறியுள்ளார்.
புதுச்சேரியில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் நுழைவுத் தேர்வு முறை வெளிப்படையாக இல்லை. முதன்முறையாக இந்த ஆண்டு காலை, பிற்பகல் என இருவேளைகள் தேர்வை நடத்தி உள்ளனர்.
காலையில் நடைபெற்ற தேர்வு மிகவும் கடினமாகவும், பிற்பகல் நடைபெற்ற தேர்வு மிகவும் எளிதாகவும் இருந்ததாக மாணவர்கள், பெற்றோர் தெரிவித்துள்ளனர். பிற்பகலில் தேர்வு எழுதிய புதுவை மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெற்று முடிந்தவுடன், வினாத்தாள், விடைத்தாள் ஆன்லைனிலேயே வெளியிடப்படும். ஆனால் இதுவரை ஜிப்மர் அதை வெளியிடவில்லை.
தற்போது வெளியான முடிவுகளில் மாலையில் தேர்வு எழுதிய மாணவர்கள்தான் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
AIPMT, AIEEE தேர்வுகளில் கூட ஓரே வேளை தான் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால்
ஜிப்மர் நுழைவுத் தேர்வு 2 வேளைகள் ஏன் நடத்தப்பட்டது என நிர்வாகத்திடம் கேட்டால் பதில் கூற மறுக்கின்றனர்.
அதோடு தேர்வு முடிவுகளையும் காலதாமதப்படுத்தாமல் தேர்வு நடந்த அன்றே விடைகளையும் இணையதளத்தில் வெளியிடுவார்கள். இதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால் இந்த நடைமுறைகள் அனைத்தும் ஜிப்மர் நுழைவுத்தேர்வில் காற்றில் பறக்கவிடப் பட்டுள்ளது. தேர்வுக்கான விடைகள் காலதாமதத்துடன் வெளியிட்டனர்.
அதிலும் பல விடைகள் தவறாக இருந்தது. இது மட்டுமில்லாமல் தேர்வு முடிவுகள் வெளியிடுவதிலும் மிகுந்த காலதாமதம் ஏற்படுத்தினர். இதில் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
குடியிருப்பு சான்றிதழ்
ஏனெனில் மத்திய அரசு ஊழியர்கள் 3 ஆண்டு புதுவையில் பணிபுரிந்தால்தான் நுழைவுத்தேர்வு எழுத முடியும் என விதி உள்ளது. இந்த விதியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற வேண்டும் என்பதற்காகவே நுழைவுத்தேர்வு முடிவை காலதாமதப் படுத்தியுள்ளனர். தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்போது என்ன விதி இருந்ததோ? அதைத்தான் பின்பற்ற வேண்டும். ஆனால் தற்போது தீர்ப்பை காரணம்காட்டி புதிதாக மாற்றங்களை உருவாக்கியுள்ளனர்.
1972-ல் பிறந்த 44 வயது முதிர்ந்த நபர் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இது எப்படி சாத்தியமாகும்? புதுவைக்கான இடஒதுக்கீட்டில் 18 பேர் வெளிமா நிலத்தை சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றவர்களின் பெயரை மட்டும் வெளி யிட்ட ஜிப்மர் நிர்வாகம் அவர்களின் முகவரியை வெளியிடாதது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மத்திய அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு முடிவுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். தொகுதி மக்கள், சமூக நலஅமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்துவேன் என்றார்.