'யுனானி' படிப்பில் சேர நுழைவுத்தேர்வு உண்டு
'யுனானி' மருத்துவ படிப்பில் சேர, நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில், ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, நேச்சுரோபதி - யோகா மற்றும் ஓமியோபதி
படிப்புகளுக்கு, 356 இடங்களும், 21 சுயநிதி கல்லூரிகளில், 1,000 இடங்களும் உள்ளன.
இதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வினியோகம் நடந்து வருகிறது. இதில், யுனானி படிப்புக்கு, சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரியில், 26 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில், மாணவர்கள் சேர, உருது மொழி கட்டாயம் படித்திருக்க வேண்டும்.
இதுகுறித்து, மாணவர் சேர்க்கை பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: யுனானி படிப்புக்கு விண்ணப்பிப்போர், உருது படித்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை இணைக்கலாம். அவ்வாறு சான்று இணைக்காவிட்டாலும், முறையாக படிக்காவிட்டாலும், விண்ணப்பித்தோருக்கு, உருது எழுத்துத்தேர்வு நடத்தப்படும். 10ம் வகுப்பு நிலையிலான கேள்விகள் கேட்கப்படும். இதில், வெற்றி பெற்றால் மட்டுமே, கலந்தாய்வில் பங்கேற்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.