ஐ.ஐ.டி., சுரங்கவியல் படிப்பில்மாணவியருக்கான தடை நீக்கம்
அண்ணா பல்கலையைத் தொடர்ந்து, இந்திய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான ஐ.ஐ.டி.,யிலும், சுரங்கவியல் படிப்புக்கு, இந்த ஆண்டு முதல், மாணவியர் சேர்க்கப்படுகின்றனர்.
இன்ஜி., தொழில்நுட்ப படிப்பில், மாணவியரை பொறுத்தவரை, 'மெக்கானிக்கல், இண்டஸ்டிரியல் இன்ஜி., மற்றும் இன்ஜினியரிங் இன்ஸ்ட்ரூமென்டேஷன்' போன்ற படிப்புகளில் குறைவாகவும்; 'கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., டெக்ஸ்டைல் டெக்னாலஜி, மெடிக்கல் இன்ஜி.,' போன்ற படிப்புகளில் அதிகமாகவும் சேருவர்.
அதே நேரம், சுரங்கவியல் இன்ஜி., படிப்பில் மாணவியரை சேர்க்க, ஏற்கனவே தடை இருந்தது. இந்திய சுரங்கவியல் சட்டம் - 1952ன் படி, தரைக்கு கீழ் இருக்கும் சுரங்கங்களில், பெண்களை பணியமர்த்தவும், மற்ற சுரங்கவியல் பணிகளில், காலை, 6:00 மணி முதல் மாலை, 7:00 மணி வரை தவிர மற்ற நேரங்களில் பணியமர்த்தவும் தடை உள்ளது.
இந்த நிலையில், 'விதிகளுக்கு உட்பட்டு, சுரங்க பணிகள் மற்றும் தொழில்நுட்ப பணிகளில், பெண்கள் மேற்பார்வையாளராகச் செயல்படலாம்' என, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், அண்ணா பல்கலையின் சுரங்கவியல் படிப்பில், கடந்த ஆண்டு தடை விலக்கப்பட்டு, மாணவியர் சேர்க்க அனுமதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, இந்த ஆண்டு முதல், ஐ.ஐ.டி.,யிலும் சுரங்கவியல் படிப்பில், மாணவியரை சேர்ப்பதற்கான தடை விலக்கப்பட்டது. இதன்படி, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.எஸ்.எம்., எனப்படும் இந்திய சுரங்கவியல் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில், சுரங்கவியலில் மாணவியர் சேர்க்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.