ஓபிசி(OBC) CREAMY LAYER - விளக்கங்கள்!
யாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள் ? யார் வரமாட்டார்கள் என்பது சற்று சிக்கலான குழப்பமான விஷயமாக மாறியுள்ளது. கிரிமி லேயர் யார் நான் கிரிமிலேயர் யார் என்று நிர்ணயம் செய்யப் பல அரசாணைகள் உள்ளன.
தமிழ்நாடு அரசின் வருவாத்துறை இந்தச் சான்றிதழை வழங்க வேண்டும்.
இதற்கு மூன்று சோதனைகள் உள்ளன.
1. அரசுவேலை தர நிர்ணயம். ( Class of govt employees)
2. வருமானச் சோதனை. (Income test)
3. செல்வச்சோதனை (wealth test)
ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
1. அரசு வேலை தர நிர்ணயச் சோதனை:
ஓபிசி கோரும் நபருடைய பெற்றோர் அரசு வேலையில் இருந்தால் அவர்களின் குரூப் என்ன என்று சோதிக்கப்படும். மத்திய மாநில அரசு வேலைகள் குரூப் ஏ, பி, சி, டி என வகைப்படுத்தப் பட்டுள்ளன.
ரூ. 6600 க்கும் மேல் தர ஊதியம்- கிரேட் பே பெறும் அரசு ஊழியர்கள் குரூப் ஏ பிரிவில் வருவார்கள். அதாவது, மாவட்ட வருவாய் அலுவலர் டிஆர்ஓ, இணை இயக்குநர் - ஜேடி, இணை பதிவாளர் - ஜேஆர், காவல் கூடுதல் கண்காணிப்பாளர்- ஏடிஎஸ்பி, செயற் பொறியாளர் - இ.இ, முதன்மைக் கல்வி அலுவலர் - சிஇஓ, போன்ற மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள அலுவலர்கள் குரூப் ஏ என்று வகைப்படுத்தப் படுவர் .
இதில் அடுத்த நிலை ஒன்று உள்ளது. பதவி உயர்வில் குரூப் ஏ நிலையை அடைந்த பெற்றோர் அதை நாற்பது வயதுக்குள் அடைந்திருக்க வேண்டும்.
இல்லையெனில் அவர்களை வசதியான பிரிவு - கிரிமி லேயரில் சேர்க்கத் தேவையில்லை. ஏனெனில் நாற்பது வயதுக்குள்தான் வளரும் இளம்பருவ குழந்தைகள் அவருக்கு இருக்கும். குழந்தைகளின் கல்விகொடுக்கும் காலத்தில் ஒருவர் குரூப் சி, குரூப் பி நிலையில் இருந்துவிட்டு ஓய்வு பெறும் நிலயில் குரூப் ஏ நிலையை அடைபவரால் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி வசதியை அளித்திருக்க முடியாது என்பது இந்த நாற்பது வயது என்பதற்கான காரணம்.
அடுத்து பெற்றோர் இருவர் குரூப் பி நிலையில் நேரடியாக அரசு வேலை பெற்றிருந்தால் அவர்களின் குழந்தைகள் கிரிமி லேயர்- வசதியான பிரிவில் வருவர். இடஒதுக்கீடு கிடையாது.
இது தவிர குரூப் பி, குரூப் சி நிலையில் வேலைபார்க்கும் பெற்றோரின் குழந்தைகள் நான் கிரிமி லேயர்- வசதியற்ற பிரிவினர் என்று வகைப்படுத்தப்படுகின்றனர். இந்தப் பெற்றோரின் ஆண்டு வருமானம் பல ஆண்டுகள் வேலை பார்த்த ஊதிய உயர்வின்மூலம் ஆறு இலட்ச ரூபாயை மீறினாலும் அதை. கருத்தில் கொள்ளத்தேவையில்லை. இவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு.
இவைதான் விதிகள்.
2. வருமானச் சோதனை:
யாரெல்லாம் அரசு வேலையைத் தவிர்த்து பிற வருமானம் பெறுகிறார்களோ அவர்களுக்கு ஆண்டு வருமானச் சோதனை என்று ஒரு சோதனை நடத்தப் பெறும்.
அதாவது ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 6 இலட்சங்களுக்கு மேல் வருமானம் வரும் பெற்றோரின் குழந்தைகள் வசதியான பிரிவினர் - கிரிமி லேயர் என்றுகருதப்படுவர். இவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. அதற்கு குறைவாக வருமானம் பெறுபவருக்கு இடஒதுக்கீடு உண்டு.
3. செல்வச் சோதனை :
சரி இதெல்லாம் விதிமுறைகள். அனைவருக்கும் தெரியும்.
என்ன இப்பொழுது சிக்கல்?
இவ்வளவு காலமாக வருவாய்த்துறை இந்த ஆயணைகளைப் பின்பற்றி ஓபிசி சான்று வழங்குகிறது. அதை யூபிஎஸ்சி, டிஓபிடி ஏற்றுவந்தது. இந்த ஆண்டு ஓபிசி சான்றுகளை அறிவுக்கு ஒவ்வாத வகையில் டிஓபிடி கிளர்க்குகள் ஸ்குரூடினி செய்யத் தொடங்கினர்.
முதலில் பெற்றோரின் வருமானத்துக்கு வருமான வரிகட்டிய வருமானவரி ரிட்டன் கேட்டனர். வெறும் நாற்பதனாயிரம் வருமானம் வரும் கூலித் தொழிலாளியிடம் வருமான வரி ரிட்டன் கேட்ட பிரகஸ்பதிகளுக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுக்கலாம்.
அடுத்ததாக வருமான வரி ரிட்டன் ஃபைல் செய்யாதவர்களுக்கு வருவாய்த்துறையிலிருந்து வருமானச்சான்று கேட்டனர். அந்த வருமானச் சான்றில் வேலைசெய்யும் மகன், மகளது வருமானத்தைச் சேர்க்கத்தேவையில்லை என்று தாசில்தார், ஆர்ஐ, விஏஓக்களுக்கு புரிய வைக்க பகீரத பிரயத்தனம் தேவைப்பட்டது.
இந்தச் சான்றுகளும் போதாது என்று ஒரு செல்ஃப் டிக்லரேஷன் கேட்டனர். இதில் ஒரே சான்றினை அனுப்பியபிறகும் வந்து சேரவில்லை என்று மீண்டும் மீண்டும் கேட்டனர். எப்படியோ ஒரு வழியாக அதைச் சமர்ப்பித்தோம்.
அடுத்ததாக, மத்திய மாநில அரசுப் பணி தவிர்த்து மின் வாரியம், எல்ஐசி, பிஎஸ்என்எல், என்எல்சி, வங்கிகளில் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகளைக் குறி வைத்தனர். தனியார் நிறுவனப் பணியாளர்களும் தப்பவில்லை.
இதில் இவர்கள் ஒரே வினாவினை எழுப்பினர். உங்கள் பெற்றோர் குரூப் ஏ அலுவலர் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம். மூன்று நாட்களில் சொல்லுங்கள். இல்லையெனில் நீங்கள் ஓபிசி கிளைம் செய்தது போலி என்று முடிவு செய்து விடுவோம் என்று கடிதம் அனுப்பினர்.
சில மாணர்கள் தங்களின் பெற்றோர் சாதாரண கிளரிக்கல் நிலையிலும், குரூப் சி, பி நிலையிலும் வேலை செய்யும் பணியாளர்கள் எனறு கூறி வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து சான்றுகளைப் பெற்று அனுப்பி வைத்தனர்.
அதைச் சொல்வதற்கு நீங்கள் ஆள் அல்ல. மத்திய அரசோ மாநில அரசோதான் சொல்ல வேண்டும் என்று இறுதித்தீர்ப்பு எழுதிவிட்டனர்.
மத்திய மாநில அரசுகளில் இதுபோன்று வாரியங்களில், பிஎஸ்யூக்களில் வேலை செய்யும் நபர்களையும் அரசுப்பணியாளர்களையும் இணைத்து குரூப் ஏ, பி, சி என்று எந்த வகைபாட்டில் வைப்பது என்பது குறித்து இதுவரை ஒரு அரசாணைகூட வெளியிடப் படவில்லை.
எனவே, 6 இலட்சரூபாய்க்கு மேல் ஊதியம் பெறுபவர் அவர் குரூப் டி பதவியில் இருந்தாலும் வசதியானவர் - கிரிமி லேயர் என்று நிர்ணயம் செய்து அனைவரையும் ஓபிசியிலிருந்து தகுதிநீக்கம் செய்துவிட்டனர். ஜெனரல் ரேங்க் பெற்றவர்களுக்கு மட்டும் பணி ஒதுக்கீடு வந்துள்ளது. மற்றவர்களுக்க பணிஏதும் கிடைக்கவில்லை!
இதுதான் இப்பொழுது எழுந்துள்ள சிக்கல்.