சிறுபான்மையினருக்கு ரூ.10 லட்சம் கடனுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினத்தவர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சிறுபான்மையினர்களாக கருதப்படும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும் தொழில்கள் செய்வதற்கு பல்வேறு கடன் உதவித் திட்டங்களை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தி வருகிறது.
இதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் கடன் பெறத் தகுதியானோர் வரும் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தனி நபர் கடன் திட்டம்: இத்திட்டத்தின் கீழ் வியாபாரம், தொழில் தொடங்கிடவும் மற்றும் ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கடன் அளிக்கப்படுகிறது.
நபர் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கப்படும். ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் வழங்கப்படும் கடன் தொகையில் 50 சதவீதம் முதலில் வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவீத கடன் தொகை, முன்பு வழங்கப்பட்ட கடன் தொகை முழுமையாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்த பின் விடுவிக்கப்படும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 6 சதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடன் தொகையை வட்டியுடன் அதிகபட்சம் 60 மாத தவணைகளில் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உரிய தேதியில் செலுத்திட வேண்டும். கடன் தவணைத் தொகையை செலுத்த தவறினால் 5 சதவீத அபராத வட்டி பயனாளியிடமிருந்து வசூலிக்கப்படும்.
கடன் பெற பொதுவான தகுதிகள்: பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் நகர்ப்புறத்தில் வசிப்பவராக இருப்பின் ரூ.1,03,000-க்கு மேற்படாமலும், கிராமப்புறத்தில் வ-சிப்பவராக இருப்பின் ரூ.81,000-க்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். சாதிச் சான்று, பள்ளி மாற்றுச் சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெரும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் நகல் மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களை எந்தவித கட்டணமும் இல்லாமல் மாவட்ட மத்திய, நகர கூட்டுறவு வங்கிக் கிளைகள் மற்றும் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்கள் மற்றும் டாம்கோ அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.