10 நாள்களில் நிறைவு பெறுகிறது பி.இ. பொதுப் பிரிவு சேர்க்கை
பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு சேர்க்கை அடுத்த 10 நாள்களில் முடிவடைய உள்ள நிலையில், 40,524 இடங்களே இதுவரை நிரம்பியுள்ளன. இதனால் 1 லட்சத்து 44,772 பொறியியல் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன.
பொதுப் பிரிவினருக்கான பொறியியல் சேர்க்கை ஜூன் 27-இல் தொடங்கியது. ஜூலை 21-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.
கலந்தாய்வு தொடங்கும்போது மொத்தம் 1 லட்சத்து 85,296 பி.இ. இடங்கள் இடம்பெற்றிருந்தன. ஞாயிற்றுக்கிழமை வரை அழைக்கப்பட்ட 58,175 பேரில், 40,524 பேர் இடங்களைத் தேர்வு செய்து கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர். 17,444 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. 207 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும், இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.
அடுத்த 10 நாள்களில் இந்த பொதுப் பிரிவினருக்கான சேர்க்கை முடிவடைய உள்ள நிலையில், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 41,717 இடங்கள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 2,824 இடங்கள், அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 231 இடங்கள் என மொத்தம் 1,44,772 இடங்கள் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகையில், கலந்தாய்வின் அடுத்த 10 நாள்களில் அதிகபட்சம் 40 ஆயிரம் இடங்கள் நிரம்ப வாய்ப்பு உள்ளது.
அதன் பிறகு, ஜூலை 23, 24 தேதிகளில் பிளஸ் 2 தொழில்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை, பின்னர் பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சேர்க்கை நடத்தப்படும். இதில் அதிகபட்சம் 5 ஆயிரம் இடங்கள் நிரம்பிவிடும்.
எனவே, கடந்த ஆண்டுகளைப் போலவே ஒட்டுமொத்த கலந்தாய்வின் முடிவில் 1 லட்சம் பி.இ. இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.