கல்வி கொள்கை குறித்து கருத்து ஆகஸ்ட் 16 வரை அவகாசம்
'புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆக., 16 வரை கருத்து தெரிவிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இருபது ஆண்டு பழமையான கல்விக் கொள்கையை மாற்ற, மத்திய அரசின் சார்பில், கல்வியாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, ஆசிரியர்களுக்கு கட்டாய திறனறி தேர்வு நடத்துதல், சிறுபான்மை கல்வி நிறுவனங்களும், மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றுதல், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதித்தல் உள்ளிட்ட, பல பரிந்துரைகளை அளித்துள்ளது.
இதன் முக்கிய அம்சங்களை, ஒரு மாதத்திற்கு முன், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டது. அதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்களின் கருத்துக்களை, ஜூலை, 31 வரை மத்திய அரசுக்கு அனுப்பலாம் என, உத்தரவிடப்பட்டது.இப்போது, ஆசிரியர் கூட்டமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, ஆக., 16 வரை, மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. கருத்துக்களை, nep.edu@gov.in என்ற மத்திய அரசின் இ - மெயில் முகவரிக்கு தெரிவிக்கலாம்.