பிளஸ் 1 மாணவர்களுக்கு அறிவியல் திறன் வளர்ப்பு : சென்னை பல்கலையில் இலவச பயிற்சி
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, அறிவியல் திறன் வளர்ப்பு பயிற்சி, சென்னை பல்கலையில் ஐந்து நாட்கள் வழங்கப்படவுள்ளது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் மூலம், ஆண்டுதோறும், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக 'இன்ஸ்பையர் கேம்ப்' என்ற அறிவியல் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில், இந்த ஆண்டுக்கான முகாம், ஆகஸ்ட் 25 - ஆக., 29, அக்., 20 - அக்., 24, டிச., 22 - டிச., 26 என மூன்று கட்டங்களாக, சென்னை பல்கலையில் நடத்தப்படவுள்ளது.
மூன்று மாவட்டங்களுக்கு... : சென்னை பல்கலையின் கிண்டி வளாகத்தில் செயல்படும் புவி அமைப்பியல் துறை சார்பில், இந்த பயிற்சி முகாம் இலவசமாக நடத்தப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், தலா 150 மாணவ, மாணவியரை இந்த முகாமில் பங்கேற்க வைக்கலாம் என, உதவி பேராசிரியர் சுரேஷ் காந்தி தெரிவித்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், அந்தந்த மாவட்டங்களிலிருந்து
பல்கலை வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டு, பல்கலை வளாகத்தில் தனித்தனியே விடுதிகளில் தங்க வைக்கப்படுவர். அறிவியல் பயிற்சி நடக்கும் ஐந்து நாட்களுக்கும் உணவு, பல்கலையால் இலவச மாக வழங்கப்படும். பயிற்சியின்போது, மாணவர் களுக்கு வழங்கப்படும் அறிவியல் உபகரணங்களும் இலவசம்.
பங்கேற்க தகுதி என்ன? : இந்த பயிற்சிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம், மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில், 94.2 சதவீதம், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், ஏ 1 கிரேடு, ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 95 சதவீதம் என மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே, முகாமில் பங்கேற்கலாம். மாணவ, மாணவியர் மற்றும் கல்வி நிறுவனங்கள், இந்த பயிற்சிக்காக எந்த நிதியும் செலவு செய்ய தேவையில்லை என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.