பி.எட்., படிக்க நாளை முதல் விண்ணப்பம் : இன்ஜி., மாணவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு
அரசு பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், நாளை முதல் வழங்கப்படுகின்றன. ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான, 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன.
இவற்றில், ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், சென்னை, சீமாட்டி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி மூலம், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கவுன்சிலிங்கிற்கு, நாளை முதல், ஆக., 9ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஆக., 10ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், சீமாட்டி வெலிங்டன் கல்லுாரியில் கிடைக்குமாறு, தபாலிலோ, நேரிலோ அளிக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், கணினி அறிவியல், பொருளியல், வணிகவியல், வரலாறு, புவியியல் உள்ளிட்ட, 13 பாடங்களில், மாணவர்கள் சேர்க்கப்படுவர்.கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த பாடப்பிரிவுகளில், 1,200 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அதில், 20 சதவீத இடங்களுக்கு, இந்த ஆண்டு முதல், பி.இ., மற்றும் பி.டெக்., பட்டதாரிகள் சேர்க்கப்பட உள்ளனர்.
இதுகுறித்து, சீமாட்டி வெலிங்டன் கல்லுாரி முதல்வரும், பி.எட்., மாணவர் சேர்க்கை செயலருமான பேராசிரியை தில்லைநாயகி கூறியதாவது: சீமாட்டி வெலிங்டன் கல்லுாரி இணையதளத்தில், தரவரிசை பட்டியல் மற்றும் கவுன்சிலிங் தேதி வெளியிடப்படும். அடுத்த மாதம், மூன்றாம் வாரத்தில் கவுன்சிலிங் நடத்தப்படும்.இன்ஜினியரிங் பட்டதாாரிகள், இயற்பியல்,வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் சார்ந்த பாடத்தை படித்திருந்தால் மட்டுமே, பி.எட்., படிப்பில் சேரமுடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
எங்கே கிடைக்கும்? :
சென்னையில், சீமாட்டி வெலிங்டன், சைதாப்பேட்டை ஆசிரியர் கல்வியியல் கல்லுாரி மற்றும் கோவை, ஒரத்தநாடு, குமாரபாளையம், புதுக்கோட்டை மற்றும்வேலுாரில் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில், 500 ரூபாய் கட்டணம் செலுத்தி, விண்ணப்பம் பெறலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் இனபட்டதாரிகள், ஜாதி சான்றிதழ் நகலுடன், 250 ரூபாய் செலுத்தி, விண்ணப்பங்கள் பெறலாம்.