22 போலி பல்கலை.: பட்டியலை வெளியிட்டது யுஜிசி
22 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. www.ugc.ac.in என்ற இணையதளத்தில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது யுஜிசி சட்டம் பிரிவு 3-இன் கீழ் உருவாக்கப்படும் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அல்லது மத்திய, மாநில அரசு சட்டங்கள் மூலம் உருவாக்கப்படும் பல்கலைக்கழகங்கள் மட்டுமே எந்தவொரு பட்டத்தையும் (இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி) வழங்க முடியும் என யுஜிசி சட்டம் 1956 பிரிவு 22(1) கூறுகிறது.
இந்த வகையில் உருவாக்கப்படாத கல்வி நிறுவனங்கள் எதுவும் "பல்கலைக்கழகம்' என்ற பெயரை பயன்படுத்த முடியாது. அதாவது பட்டம் வழங்க இயலாது என யுஜிசி சட்டப் பிரிவு 23-இல் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு யுஜிசி சட்டத்துக்குப் புறம்பாக பல்கலைக்கழகம் என்ற பெயரை வைத்துக் கொண்டு நாடு முழுவதும் இயங்கி வரும் 22 போலி பல்கலைக்கழகங்களை யுஜிசி கண்டறிந்து, மாணவர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்தப் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது.
இதில், தமிழகத்தில் திருச்சி புத்தூரில் செயல்பட்டு வரும் டி.டி.பி. சம்ஸ்கிருத பல்கலைக்கழகம், கேரள மாநிலம் கிஷாநட்டத்தில் இயங்கி வரும் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கர்நாடக மாநிலம் பெல்காம் கோகாக் பகுதியில் அமைந்துள்ள பதகன்வி சர்க்கார் உலக திறந்தநிலை பல்கலைக்கழகம், புதுதில்லி இந்திய அறிவியல், பொறியியல் நிறுவனம் உள்பட 22 பல்கலைக்கழகங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.