பி.ஆர்க்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை 26ல் நடக்கிறது.'ஆர்கிடெக்ட்' என்ற கட்டட வடிவமைப்பு தொடர்பான இன்ஜி., படிப்பு, பி.ஆர்க்., என்ற பெயரில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில்
உள்ள கல்லுாரிகளின், 2,800 இடங்களில், 1,800 இடங்கள், தமிழக அரசின், ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன.
இந்த ஆண்டு கவுன்சிலிங் மூலம் அட்மிஷன் பெற, 2,500 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 'நாட்டா' என்ற தேசிய ஆர்கிடெக்ட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வை எழுதாத, 181 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.பி.ஆர்க்., கவுன்சிலிங், வரும் 26ல் நடக்கிறது. காலை 7:30 மணிக்கு, மாற்றுத்திறனாளி மாணவர்கள்; காலை 9:00 மணி முதல், மற்ற மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும். ஒரே நாளில், அனைத்து இடங்களுக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும்.இந்த ஆண்டு பி.ஆர்க்., படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில், 293, 'கட் - ஆப்' மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 'நாட்டா' தேர்வு மதிப்பெண்ணில், 200க்கு எடுத்த மதிப்பெண்ணும்; பிளஸ் 2 மொத்த மதிப்பெண்ணை, 200க்கு எவ்வளவு என மாற்றி, இரண்டையும் மொத்தம், 400 மதிப்பெண்களுக்கு மாற்றி, 'கட் - ஆப்' மதிப்பெண் நிர்ணயம் செய்யப்படுகிறது.