அப்துல்கலாம் நினைவிடம் அமைக்கும் பணி: வரும் 27-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா
அப்துல்கலாம் நினைவிடம் அமைக்கும் பணி: வரும் 27-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என மனோகர் பாரிக்கர் தகவல்
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி காலமானார்.அவரது
நினைவிடம் ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்க்கரும்பு எனுமிடத்தில் அமைந்துள்ளது.
அவரது நினைவை போற்றும் வகையில் நினைவிடம் அமைந்துள்ள இடத்தின் அருகிலேயே அறிவுசார் மையம், அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. ஆனால், பணிகள் தொடங்க காலதாமதம் ஆவதாகவும், நினைவிடம் பராமரிப்பின்றி கிடப்பதாகவும் பல்வேறு தரப்பினரும் புகார் கூறினர்.
இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் கலாம் நினைவிடம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் பேசினார். அப்போது, கலாம் நினைவிடம் பராமரிக்கப்படாமல் இருப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
அதன்பின்னர் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இதுபற்றி விளக்கம் அளித்து போது கலாம் நினைவிடம் கட்டும் பணியில் தமிழக அரசு முழு ஆதரவை வழங்கிவருகிறது. இதற்காக தமிழக அரசு 1.8 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி தந்துள்ளது. கூடுதல் நிலம் கையகப்படுத்துவதற்காக காலம் கடத்த மாட்டோம். வரும் 27-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நிச்சயம் நடக்கும் என்று கூறினார்.