பிளஸ்-2 பாடத்திட்டம் அடுத்த ஆண்டு மாறுமா?
தமிழக அரசு பரிசீலனைபிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. தமிழக அரசு 5 ஆண்டுக்கு ஒரு முறை அ
ப்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தியது.
தற்போது நடைமுறையில் உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் தயாரித்து 9 வருடங்கள் ஆகின்றன.இதனால் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. பாடத்திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பை சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனரகம், மாநில ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்திடம் ஒப்படைத்தது. இதையொட்டி முன்னாள் அண்ணாபல்கலைக்கழக பேராசிரியர் நாகபூஷன ராவ் தலைமையில் பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைக்கப்பட்டது. வரைவு பாடத்திட்டம் ஒவ்வொரு பாடத்திற்கும் நிபுணத்துவம் வாய்ந்த 3 ஆசிரியர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. பிளஸ்-1 பாடத்திற்கு 18 தலைப்புகளிலும், பிளஸ்-2 பாடத்திற்கு 18 தலைப்புகளிலும் வரைவுப்பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. பொதுமக்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை கேட்பதற்காக மாவட்ட தலைநகரங்களில் கூட்டம் நடத்தப்பட்டது. அவர்களின் சிறந்த ஆலோசனைகளும், கருத்தும் ஏற்கப்பட்டன. அந்த வரைவுப்பாடத்திட்டம் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு கருத்துக்கள் கேட்கப்பட்டன. அந்த கருத்துக்களில் தேவையானவை ஏற்கப்பட்டு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது.
இந்த பாடத்திட்டம் அரசின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது. அரசு பரிசீலனை இப்போதைய பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் மாறினால் 2017-2018-ம் ஆண்டு பிளஸ்-1 வகுப்புக்கும், 2018-2019-ம் ஆண்டு பிளஸ்-2 வகுப்புக்கும் அறிமுகப்படுத்தப்படும். பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.