அரசு மருத்துவ கல்லூரிகளில் 969 புதிய பணியிடங்கள்
அரசு மருத்துவ கல்லுாரிகளில், 969 புதிய பணியிடங்கள் ஏற்படுத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு, கோவை
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ கல்லுாரியில், 100 மாணவர் சேர்க்கையுடன், மருத்துவ படிப்பு துவங்க, மத்திய அரசு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது; அதன்படி, மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கரூர் மற்றும் புதுக்கோட்டையில், தலா, 150 மாணவர்கள் சேர்க்கையுடன், புதிதாக அரசு மருத்துவ கல்லுாரிகள் துவங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு இடங்களிலும், புதிய மருத்துவ கல்லுாரி துவங்க, கட்டடங்கள் கட்டவும், மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அமைக்கவும், தலா, 229 கோடி ரூபாய்க்கு, நிர்வாக ஒப்புதலும், நிதி ஒப்பளிப்பும் வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில், புதிய அரசு மருத்துவ கல்லுாரி, 2017 - 18ம் கல்வியாண்டு முதல், 150 மாணவர்கள் சேர்க்கையுடன் துவங்க, கட்டடப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள, ஒரு சிறப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.