பெட்டிக்கடைகளை கண்காணிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு :
'கஞ்சா சாக்லேட்' விபரீதத்தை உணர்ந்த தமிழக அரசு, மாநிலம்முழுவதும், உணவு பாதுகாப்புத்துறை மூலம் அதிரடி நடவடிக்கையை துவக்கி உள்ளது.பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் சோதனை நடத்தி, போதை சாக்லேட், 'கு
ட்கா, ஜர்தா' உள்ளிட்ட புகையிலை பொருட்களும்பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சி பள்ளி அருகே, பெட்டிக் கடையில் விற்கப்பட்ட கஞ்சா சாக்லேட் வாங்கிச் சாப்பிட்ட, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பரத், 13, என்ற மாணவன், உயிருக்கு ஆபத்தான நிலையில், எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்; அவனைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர்.
அதிகாரிகளுக்கு 'டோஸ்' :இதில், 'நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு எங்களுக்கு இல்லை' என, உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கைவிரித்தது குறித்து, நமது நாளிதழில், விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, அதிகாரிகளை அழைத்து, 'டோஸ்' விட்ட,சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தமிழகம் முழுவதும் நேற்று, வேட்டையைத் துவக்கினர். பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், தின்பண்டங்கள், சாக்லேட் வகைகள் குறித்தும் சோதனை நடந்தது.சென்னையில், 87 கடைகளில் நடந்த சோதனையில், தண்டையார்பேட்டை, சுந்தரம் பிள்ளை நகர் பகுதியில் உள்ள கடையில், இரண்டு கஞ்சா சாக்லேட் பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தவிர, 187 கிலோ பிற வகை சாக்லேட் வகைகளும், குட்கா, ஜர்தா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களும் சிக்கின.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகம் முழுவதும், பள்ளிகள் அருகே உள்ள கடைகளில், போதை சாக்லேட்,தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனையில் உள்ளதா என, சோதனை நடத்தி வருகிறோம். சென்னையில், 187 கிலோ உட்பட 500 கிலோ கஞ்சா சாக்லேட் மற்றும் புகையிலை பொருட்கள் சிக்கி உள்ளன. மாநிலம்முழுவதும்,இன்றும் முழுவீச்சில் வேட்டை தொடரும்' என்றார்.இந்திய மருத்துவ முறை சார்ந்த, மருந்து ஆய்வாளர்கள், தமிழகம் முழுவதும், பள்ளி தலைமை ஆசிரியர்களை சந்தித்து, 'மாணவர்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்; பள்ளி அருகே தடை செய்யப்பட்ட சாக்லேட், உணவுப் பொருட்கள் விற்பனை நடந்தால் தகவல் கொடுங்கள்' எனக் கூறி, தங்களின் மொபைல் போன் எண், அலுவலக போன் எண்களை கொடுத்து வருகின்றனர்.
ஒரு வாரமாகும்...: 'கஞ்சா சாக்லெட் பரிசோதனை அறிக்கை வருவதற்கு, ஒருவாரம் ஆகலாம்' என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை மாநகர காவல்துறை போலீஸ் அதிகாரிகள்கூறியதாவது: கஞ்சா சாக்லேட்டில், உப்பு, மிளகு, திப்பிலி, பேரிச்சம்பழம் ஆகியவற்றுடன், கஞ்சாவும் கலந்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் தான், சாக்லேட்டை திறந்தவுடன், 'குப்'பென, கஞ்சா வாடை வருகிறது. தண்டையார் பேட்டையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா சாக்லேட்கள், அண்ணாநகரில் உள்ள அறிஞர் அண்ணா ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையத்திற்கு, பரிசோதனைக்காகஅனுப்பப்பட்டுள்ளன.கஞ்சா சாக்லேட்டில் என்னென்ன பொருட்கள், எவ்வளவு சதவீதம் உள்ளதென அறிக்கை முடிவில் தான் தெரியவரும். அறிக்கை வர, ஒரு வாரம் ஆகலாம்.இவ்வாறு, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருவர் கைது :தண்டையார்பேட்டை, பட்டேல் நகர் மாநகராட்சிப் பள்ளிக்கு எதிரே உள்ள பெட்டிக்கடையில், கஞ்சா சாக்லேட் விற்ற நேதாஜி நகரைச் சேர்ந்த சுரேஷ் பகதுாரை, கடந்த 2ம் தேதி, போலீசார் கைது செய்தனர். இன்ஸ்பெக்டர் வீரக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார்,தண்டையார்பேட்டை பகுதியில், நேற்று காலை 10 மணியளவில், பெட்டிக்கடைகளில் ஆய்வு நடத்தினர்.இதில், போதை தரும் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பீம் யாதவ், தண்டையார்பேட்டை சுந்தரம் பிள்ளை நகரை சேர்ந்த மோதிலாலையும் கைது செய்தனர். போதை தரக்கூடிய பொருட்களை விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.இதே பகுதியில், பள்ளிக்கு 100 மீட்டர் தொலைவில் உள்ள கடைகளில் நடத்த ஆய்வில், பெயர், காலாவதியான மற்றும் பில்இல்லாத பொருட்களை, உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள்பறிமுதல் செய்துஉள்ளனர்.
மாணவன் உடல் நிலை தொடர்ந்து முன்னேற்றம் : கஞ்சா சாக்லெட் சாப்பிட்ட மாணவன் பரத், 13, எழும்பூர் அரசு மருத்துவமனையில், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான். நேற்று முன்தினம், லேசாக கண் விழித்தான்; கை,கால்களில் லேசான அசைவு ஏற்பட்டது.நேற்று, அவனது உடல் நிலையில் மேலும் முன்னேற் றம் ஏற்பட்டதால்,அவனுக்கு அளிக்கப்பட்ட செயற்கை சுவாசம் நீக்கப் பட்டுள்ளது.'இருந்தபோதிலும், தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக உடல் நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தால், விரைவில் அவனுக்கு நினைவு திரும்ப வாய்ப்பு உள்ளது' என, டாக்டர்கள்நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஐஸ்கிரீமிலும் ஆபத்து! :போதை கலந்த சாக்லேட் போன்று, ஐஸ்கிரீமிலும் போதை கலந்து விற்க வாய்ப்பு உள்ளதால், ஐஸ்கிரீம் கடைகளிலும் சோதனை நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால், இன்று முதல், ஐஸ்கிரீம் கடைகளிலும், திடீர் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
புகார் எண் :சந்தேகப்படும்படியாக சாக்லேட், உணவுப்பொருட்கள் விற்பனை நடந்தால், உணவு பாதுகாப்புத் துறையின் புகார் பிரிவிற்கு, 94440 42322 எண்ணிலும்; இந்திய மருத்துவத் துறையின், மாநில மருந்து உரிமம் வழங்கும் ஆணையத்திற்கு, 044 - 2622 3653 எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.
பெட்டிக்கடைகளை கண்காணிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு : அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிஒன்றிய பள்ளிகள், அரசு தொடக்க பள்ளிகள், அரசு உயர்நிலை பள்ளிகள், கள்ளர், பழங்குடியினர் நல பள்ளிகள், உருது பள்ளிகள் ஆகியவற்றின், தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளும்உத்தரவு பிறப்பித்துள்ளனர்.இதன்படி, 'பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு அருகிலுள்ள பெட்டி கடைகள், 'ஸ்டேஷனரி' கடைகளில் விற்கப்படும் சாக் லேட் போன்ற இனிப்பு பொருட்களை கண் காணிக்க வேண்டும்.
சந்தேகப்படும் படியாக, குறிப்பிட்ட கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தாலோ, மாணவர்கள் குறிப்பிட்ட தின்பண்டத்தை விரும்பி சாப்பிட்டாலோ, உள்ளூர் சுகாதார துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து, விசாரணை நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த ப்பட்டுள்ளனர்.