பள்ளி பாடத்திட்டத்தில் மனித உரிமை சேர்ப்பதால் பயனில்லை: முன்னாள் நீதிபதி
பள்ளி பாடத்திட்டத்தில் மனித உரிமையை சேர்த்தால் எந்த பயனும் இருக்காது என, சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பேசினார்.
தாகூர் கலைக்கல்லுாரி தமிழ் துறை சார்பில் மனித உரிமை பயிலரங்கம்
கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. தமிழ்த் துறை தலைவர் இளங்கோ வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கை துவக்கி வைத்து சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பேசியதாவது:
இந்தியாவில் 120 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதில் ஐந்தில் ஒரு பங்கு மக்களுக்கு சம மனிதன் என்கிற சம உரிமையே கிடைக்கவில்லை. இந்தியாவின் ஒரு கிராமத்தில் குறிப்பிட்ட இனத்தவர் ஆண் நாயை வீட்டில் வளர்க்க கூடாது என்ற வினோத கட்டுப்பாடு இருக்கிறது.
மற்றொறு கிராமத்தில் 5 வயதிற்கு பிறகு பெண்கள் பள்ளிக்கு சென்று படிக்கக் கூடாது என்று கட்டாய ஊர்க் கட்டுப்பாடு இருக்கிறது. இந்திய அரசியலைப்பு சட்டத்தில் சம உரிமை, கல்வி உரிமை என, அனைத்து உரிமைகளும் இருக்கிறது. ஆனால், அதனை நிலை நாட்டுவதில் தான் சிக்கலே இருக்கிறது.
பாகிஸ்தானின் பெண் குழந்தை பள்ளி செல்ல கூடாது என, துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், இங்கே துப்பாக்கி ஏந்தாமல், சமுதாய கட்டுப்பாட்டினை விதிக்கின்றனர். அப்புறம் எங்கே சம உரிமை ஜனநாயக குடியரசு காணமுடியும்.
பள்ளி குழந்தைகளுக்கு மனித உரிமையை போதிக்க வேண்டும் என்று இப்போது விவாதம் எழுந்துள்ளது. என்னை பொறுத்தவரையில், பாட திட்டத்தில் தனியாக சேர்க்க தேவையில்லை. அவர்களிடம் புரியாத விஷயத்தை சுமையாக திணிக்க தேவையில்லை. பள்ளி பாடத்திட்டத்தில் மனித உரிமை சேர்த்தால் எந்த பயனும் இருக்காது
இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு அமர்வுகளில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி திலகவதி, நீதிபதி கிருஷ்ணய்யர் நுாற்றாண்டு விழாக்குழு தலைவர் சுகுமாரன் பேசினர்.
தொடர்ந்து நடந்த குழு விவாதத்தில் பராங்குசம், தாமரைக்கோ, சுகுமாரன், ராஜராஜன், வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர் நவச்சிவாயம், இன்ஜினியர் தேவதாசு பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் தமிழ்த் துறை பேராசிரியர் வியாசராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.