யார் யாருக்கு பயிர் கடன் தள்ளுபடி கிடைக்கும்? : வழிகாட்டி விதிமுறைகள் வெளியீடு.


          விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வங்கி அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய, வழிகாட்டி விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 


          'மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும்' என, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆட்சிக்கு வந்ததும், பயிர்க்கடனை தள்ளுபடி செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதையடுத்து, கூட்டுறவு வங்கிகளுக்கு, சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர கால கடன், நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது. கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து, 2016 மார்ச், 31ம் தேதி வரை, சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட, 5,780 கோடி ரூபாய் அளவிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக, முதல்வர் அறிவித்தார். அதன்படி, கடன் தள்ளுபடி செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை, நேற்று அரசு அறிவித்துள்ளது.

அதன் விவரம்:

மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, ஊரக வளர்ச்சி வங்கி, நகர கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில், விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்

 குறுகிய கால கடன், தங்க நகைகளை அடமானம் வைத்து பெறப்பட்ட குறுகிய கால கடன்; நடுத்தர கால கடனாக மாற்றப்பட்ட குறுகிய கால கடன்; நடுத்தர கால கடன், நீண்ட கால கடன் அனைத்தும் வட்டியுடன் தள்ளுபடி செய்யப்படும்

இரண்டரை ஏக்கர் நிலம் வரை வைத்திருப்போர், குறு விவசாயிகள்; 2.5 முதல், 5 ஏக்கர் நிலம் வரை வைத்திருப்போர், சிறு விவசாயிகள்

 வழக்கு விசாரணையில் உள்ளவர்கள், மோசடி, குற்றவியல் வழக்கில் சிக்கியவர்களுக்கு, இந்த தள்ளுபடி பொருந்தாது பினாமி கடன், போலி ஆவணங்கள் மூலம் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படாது

 கடன் மானியம் பெற்றிருந்தால், அதுபோக மீதி உள்ள தொகை மட்டும் தள்ளுபடி செய்யப்படும்

சிட்டா, பட்டா கொடுத்து, பயிர் வைப்பதற்காக, நகை அடமானம் வைத்து பெறப்பட்ட கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்படும். விவசாயம் அல்லாத வேறு தேவைக்காக பெறப்பட்ட, நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படாது தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகை, அரசால் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும்

 கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, புதிய கணக்கு துவக்கி, கடன் வழங்க வேண்டும் கடன் தள்ளுபடி செய்யப்படும் விவசாயிகள் பட்டியலை, வங்கிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும்

ஒவ்வொரு விவசாயிக்கும், அவர்களின் கடன் தள்ளுபடி விவரம், தபால் மூலம் தெரிவிக்க வேண்டும்

சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு, 'கடன் பாக்கி இல்லை' என்ற சான்றிதழ் வழங்க வேண்டும்

கடனுக்காக, விவசாயிகளிடம் இருந்து பெற்ற ஆவணங்கள், நகைகள் போன்றவற்றை, அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்

கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் பெயர், அவர்களுடைய உறுப்பினர் எண், கடன் எண் ஆகியவற்றை, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஒட்ட வேண்டும். இதற்கு ஆட்சேபனை தெரிவிப்போர், அறிவிப்பு ஒட்டப்பட்ட நாளில் இருந்து, ஒரு வாரத்திற்குள்தெரிவிக்கலாம்

ஆட்சேபனை வந்தால், மண்டல இணைப் பதிவாளர் தலைமையிலான குழு, ஒரு வாரத்திற்குள் ஆய்வு செய்யும். இறுதி பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)