பொறியியல் படிப்புகள் எழும் ஆயிரம் கேள்விகள்


           போகிறபோக்கைப் பார்த்தால், நடப்பாண்டில் பொறியியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கணிசமாக குறையும். 


           அதிக பட்சமாக, மொத்தமுள்ள, 527 கல்லுாரிகளில், ஒட்டுமொத்தமாக உள்ள பல்வேறு பாடப் பிரிவுகளுக்கான இடங்களில், 55 சதவீதம்கூட முழுமை பெறாமல், லட்சம் 'சீட்'காலியாக இருக்கும். ஆனால், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லுாரிகளில், சேர்க்கை சற்று ஆறுதலாக இருக்கிறது.
பொறியியல் படிப்பில், மெக்கானிக்கல் பிரிவு, கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட சில படிப்புகளில் ஆர்வம் காட்டும் மாணவ, மாணவியர், மற்றவற்றில் ஆர்வம் காட்டவில்லை. இப்படிப்புக்கு ஏற்படும் செலவினமும், நடுத்தர குடும்பத்தினர் பாக்கெட்டை காலியாக்குகிறது. வங்கிகள் எளிதாக கடனுதவி தருவதும் அல்லது தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள் ஆதரவுடன் நிதி உதவி தருவதும், தற்போது குறைந்து விட்டது.
இன்று, சிறு, குறு தொழிலதிபர்களுக்கு பணம் தந்தால், அந்தப் பணம் பெருமளவு திரும்பி வரலாம் என்ற எண்ணம் வங்கிகளிடம் மேலோங்கியுள்ளது.
அதேசமயம், தொழில்துறையில், 'தொழில் திறமை பட்டதாரி'களை பணியில் அமர்த்த விரும்புகின்றனர்.
தொழில்திறன் பெறும்வரை, வேறு வேலைக்கு செல்ல முடியாத வகையில், ஒப்பந்த பத்திரம் எழுதித்தந்து, பி.இ., பட்டதாரிக்கு வேலை கிடைப்பதும் உண்டு. அத்துடன், அதிகமான தொழில் நிறுவனங்கள், டிப்ளமோ பட்டதாரிகளை வேலைக்கு எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. ஏனெனில், அப்படிப்பில் அடிப்படை பயிற்சிகள் சில இயல்பாக இருக்கின்றன.
அத்துடன் ஆந்திரா, கர்நாடகாவில் உருவாகும் பொறியியல் படித்த மாணவர்களுக்கு இருக்கும் கிராக்கி, நமது மாணவர்களுக்கு இல்லை. நமது மாணவர்கள், மேற்படிப்புக்கு அதிகம் செலவில்லாத ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை நாடி, அங்கு முதுகலை பட்டம் பெற்று, வேலைவாய்ப்பும் பெற்று, அந்நாட்டு குடிமகன் ஆக விரும்புகின்றனர். இது சில நுாறு மாணவ, மாணவியருக்கு கிடைக்கும் வாய்ப்பாகும்.
இவை ஒருபுறம் இருக்க, தனியார் பொறியியல் கல்லுாரிகளில், பாடங்களை நடத்த, போதிய அனுபவம் மிக்க ஆசிரியர்கள் கிடையாது. அதை பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன. ஆகவே, இடத்தை நிரப்ப, பல்வேறு சலுகைகள் தர, இப்போது சில தனியார் கல்லுாரிகள் முன்வந்திருப்பது அதன் அடையாளம் ஆகும். இது அமெரிக்க கல்வி நிறுவனங்களை காப்பியடிக்கும் முயற்சி எனலாம்.
அங்கே, கல்வி நிறுவனங்களின் படிப்பு தகுதி, வசதி ஆகியவை பட்டியலிடப்பட்டு, அதன் அடிப்படையில் சேர்க்கைக்கு ஊக்கம் தரப்படுகிறது. அத்துடன், ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின், பல்வேறு அம்சங்களையும் ஆய்ந்து, தர நிர்ணய பட்டியல் தரப்படுகிறது. அந்த மாதிரி நடைமுறை, இங்கு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அமெரிக்க நிறுவனங்களைப் போல, இங்கே அதிக கல்விக் கட்டணம் இல்லை என்பது மட்டுமே ஆறுதலான விஷயம்.
இதுவரை, பொறியியல் படிப்பில், இந்த ஆண்டு சேர்க்கையில், 34 ஆயிரம் முதல் தலைமுறை மாணவ, மாணவியர் சேர்ந்திருக்கின்றனர். நான்காண்டுகள் கழித்து, இவர்களில்
எத்தனை சதவீதம் பேர் உயர்ந்த மதிப்பெண் பெறுவர்? அவர்களில் எத்தனை பேருக்கு மாதத்திற்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கு குறையாத சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கிறது என்ற தகவல் வெளிவரும் போது, இப்படிப்பு காலத்திற்கேற்ப மாறிவிட்டதா என்பதற்கு, ஒரு உரைகல்லாக இருக்கும். இச்சூழ்நிலையில், கலை, அறிவியல் படிப்பு படித்தவர்கள், வங்கி வேலை, அரசு வேலை ஆகியவற்றிற்கான தேர்வு எழுதுவதுபோல, பொறியியல் பட்டதாரிகளும் கிளம்பியிருக்கின்றனர் என்பதே உண்மை. ஆகவே மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து, கல்வித் திட்டத்தில் சில மாற்றமுள்ள அணுகுமுறைகளை செயல்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது. நல்ல வேளையாக, அரசு பொறியியல் கல்லுாரிகளில், 192 உதவிப் பேராசிரியர்களையும், அரசு பாலிடெக்னிக்கில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும் நியமிக்க, தமிழக அரசு முன்வந்திருக்கிறது. எப்படி அதிகம் பேர் பி.எட்., பட்டப்படிப்பு படித்து வேலையின்றி, சான்றிதழை மட்டும் வைத்திருக்கும் அவலம் உள்ளதோ, அது போல, இத்துறையிலும் ஆபத்து வரலாம். முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவ, மாணவியர், பல்வேறு பட்டப்படிப்புகள் படித்தபின், அதற்கேற்ப வேலைவாய்ப்புகள் கிடைக்க அரசு வழிகண்டாக வேண்டும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank