கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு புதிய இயக்குநர்: ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்
கல்லூரிக் கல்வி இயக்குநராக இருந்து வரும் சேகரின் பணிக் காலம் ஞாயிற்றுக்கிழமையோடு (ஜூலை 31) முடிவடைய உள்ள நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்குநராகப் பணியா
ற்றி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி மதுமதி கூடுதல் பொறுப்பில் சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக புதிய பொறுப்பை அவர் ஏற்றுள்ளார்.
கல்லூரிக் கல்வி இயக்குநராக 2015 செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் பணியாற்றி வருபவர் பேராசிரியர் சேகர். இவர் ஞாயிற்றுக்கிழமையோடு ஓய்வு பெறுகிறார். கல்லூரிக் கல்வி இணை இயக்குநரான (நிதி) இவர், கூடுதல் பொறுப்பில் கல்லூரிக் கல்வி இயக்குநர் பணியில் நியமிக்கப்பட்டார். இவருக்கு முன்பிருந்த பேராசிரியர் தேவதாஸýம் செய்யாறு அரசு கலைக் கல்லூரி முதல்வர் பணியை கவனித்துக் கொண்டே, இயக்குநர் பணியையும் கூடுதலாகக் கவனித்து வந்தார்.
இவ்வாறு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பு அதிகாரிகளே இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்படுவதால், அரசுக் கல்லூரி வளர்ச்சித் திட்டப் பணிகள் தாமதமாகின்றன. எனவே, புதிதாக நியமிக்கப்படுபவர் முழு நேர இயக்குநராக நியமனம் செய்யப்பட வேண்டும் என பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பேராசிரியர்கள் அதிருப்தி: இயக்குநராக ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டிருப்தோடு, மீண்டும் பொறுப்பு அதிகாரியே அந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டிருப்பது பேராசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றப் பொதுச் செயலாளர் சிவராமன் கூறியது:
கல்லூரிக் கல்வி இயக்குநர் பதவியில் காலம் காலமாக மூப்புபெற்ற கிரேடு-1 கல்லூரி முதல்வர்கள் நியமிக்கப்படுவதே வழக்கம். இந்தத் தகுதியுடன் பல முதல்வர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களின் உரிமையைப் பறிக்கின்ற வகையில், ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அந்தப் பணியில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அதுமட்டுமன்றி, முழுநேர அதிகாரியாக அல்லாமல் மீண்டும் பொறுப்பு அதிகாரியே நியமனம் செய்யப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றார் அவர்.