இந்த ஆண்டில் டிசம்பர் மாதம் ஒரு விநாடி கூடுதலாக இருக்கும்!
இந்த ஆண்டில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரமும், அணுவியல் நேரமும் மாறாமல் இருக்க வேண்டியது அவசியம். அதனால் பூமியின் மெதுவான சுழற்சியால் ஏற்படும் தாமதத்தை சர்வதேச நேரத்தில் சேர்க்கிறார்கள்.
ஆனால் அணுவியல் கடிகாரத்தின் நேரத்தைவிட பூமி தினமும் 1.5 முதல் 2 மில்லி விநாடிகள் மெதுவாகச் சுழல்கிறது. இதன் காரணமாக, 500 முதல் 750 நாள் கால அளவில் பூமி சுழற்சியின் அடிப்படையிலான நேரத்துக்கும், துல்லியமான அணுவியல் கடிகார நேரத்துக்கும் சுமார் ஒரு விநாடி வேறுபாடு காணப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி நள்ளிரவு 11 மணி 59 நிமிடம், 59-ஆவது விநாடிக்குப் பிறகு கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.