பள்ளி கழிப்பறையில் பெருக்கெடுத்த மணல் ஊற்று

பள்ளி கழிப்பறையில் பெருக்கெடுத்த மணல் ஊற்று : டன் கணக்கில் வெளியேறியதால் 'லீவு'

சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை தரைப் பகுதியில் இ
ருந்து, டன் கணக்கில் கிளம்பிய மணல் ஊற்றால், மாணவ, மாணவியர் பீதி அடைந்தனர். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

மாணவர்களுக்கு தடை : சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில், தாளமுத்து நடராஜர் மாளிகை எதிரில், மேம்பாலத்துக்கு பக்கவாட்டு பகுதியில், அம்பேத்கர் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 15 மாணவியர் உட்பட, 107 பேர் படிக்கின்றனர். பள்ளிக்கு, நேற்று காலை, 6:45 மணிக்கு, உடற்கல்வி ஆசிரியர் சிவகுமார் வந்தார். அப்போது, பள்ளி வளாகத்தில், ஆறாம் வகுப்பு கட்டடத்துக்கு அருகில், புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையில் இருந்து, நீர் கலந்த மண், சேறும், சகதியுமாக டன் கணக்கில் ஊற்றெடுத்து வருவதை பார்த்தார். அந்த மணல் ஊற்று, கடல் அலை போல் கொந்தளித்து, வெளியேறிக் கொண்டிருந்தது. கழிப்பறை உள்ளே, ஆறடி உயரத்துக்கு எழும்பிய மணல், கதவு அடைக்கப்பட்டிருந்ததால், சிமென்டால் கட்டப்பட்ட ஜன்னல் ஓட்டைகள் வழியே வெளியேறி, பள்ளி வளாகத்தில், 200 மீட்டர் சுற்றளவுக்கு பரவியிருந்தது. இதை கண்ட ஆசிரியர் சிவகுமார், உடனடியாக தலைமை ஆசிரியர் கண்மணிக்கு தகவல் அளித்தார். அதேபோல், எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் தகவல் அளித்தார். பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர், மைதானத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு, வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டனர்.

விடுமுறை : பின், பள்ளி தலைமை ஆசிரியை, 7:00 மணிக்கு வந்ததும், மெட்ரோ ரயில், பொதுப்பணித் துறை மற்றும் பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் பொறுப்பு இன்ஜினியர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து, மெட்ரோ ரயில் பணியாளர்கள் மூலம், மணலை அகற்ற ஏற்பாடு செய்தனர். ஆனாலும், நேற்று மதியம் வரை, அந்த கழிப்பறைக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. பின், முதன்மை கல்வி அதிகாரி அனிதா, மத்திய சென்னை எம்.பி., விஜயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கருதி, பள்ளிக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டது. பள்ளி கட்டடத்துக்கு ஏதாவது சேதம் உள்ளதா என, பொதுப்பணித் துறை இன்ஜினியர்கள் ஆய்வு நடத்தி, விரிசல் இல்லை என உறுதி செய்தனர். பள்ளி வளாக தரைக்கு அடியில், மெட்ரோ ரயில் பணிகள் நடந்ததால், இந்த மணல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளி கட்டடத்தில் அதிர்வு - கல்வி துறை அலட்சியம் : இந்த பள்ளியின் கழிப்பறை கட்டடம், சில மாதங்களுக்கு முன்புதான், ரோட்டரி சங்கத்தால், ஆறு லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது; இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. மணல் கொந்தளித்த இடத்தில், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத ஆழ்குழாய் கிணறு இருந்துள்ளது. மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள் நடக்கும் இடம் குறித்து, இரண்டு ஆண்டுக்கு முன்பே, பள்ளிக்கு தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆழ்குழாய் கிணறு, இடியும் நிலை கட்டடங்கள் இருந்தால், அதுபற்றி தகவல் அளிக்க வேண்டும் என்றும், மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், கல்வித் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதேபோல், சுரங்கப்பாதை தோண்டும்போது, பள்ளி கட்டடத்தில் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இத்தனைக்கும், இப்பள்ளி வளாக கட்டடத்தில்தான், வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்கள் உள்ளன. தற்போது, இந்த சம்பவம் நள்ளிரவு துவங்கி, அதிகாலையில் முடிந்துள்ளது. அதனால், உயிர் சேதம் ஏதும் இல்லை.

10 டன் மணல் : திடீர் ஊற்றால், அந்த பள்ளிக்கு, 10 டன் அளவுக்கு மணல் கிடைத்துள்ளது.
முதலில் கறுமை நிறத்தில், ரசாயனம் கலந்த மணல் வெளியேறி உள்ளது. சுரங்கப் பாதை தோண்டும் இயந்திரத்தால், அதிவேக அழுத்ததுடன் பூசப்படும், 'பென்டோனைட்' கலவையில் நீர் கலந்து, இப்படி வெளியேறியதாக தெரியவந்துள்ளது. பின், மிகவும் குழைவான சவுடு மணல் வெளியானது. இந்த மணல், ஒரு லாரி லோடு, 12 ஆயிரம் ரூபாய் என்பதால், வெளியே கொட்டாமல், பள்ளி வளாகத்தில் தேக்கி வைத்துள்ளனர்.

மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணியே காரணம் : சென்னையில், மெட்ரோ ரயில் பணிகள், சென்ட்ரல் முதல் கோயம்பேடு வரையிலும், வண்ணாரப்பேட்டை முதல் மீனம்பாக்கம் வரையிலும் நடக்கின்றன. இதில், எழும்பூர் - சென்ட்ரல் - சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் இணைக்கும் வழித்தடம், எழும்பூர் முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை நடந்து வருகிறது. இதற்கான சுரங்க பாதை தோண்டும் பணி, ஒரு மாதமாக நடந்து வருகிறது. தற்போது, அப்பணி, தாளமுத்து நடராஜர் மாளிகை மற்றும் எழும்பூர் மேம்பாலத்தை கடந்துள்ளது.
மேம்பாலத்தின் பக்கவாட்டில் உள்ள அம்பேத்கர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தின் அடிப்பகுதியில், 50 மீட்டர் ஆழத்தில், 60 மீட்டர் சுற்றளவுக்கு சுரங்கப் பாதை தோண்டப்பட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வரும் சுரங்கப்பாதை, பள்ளி வளாகத்திற்கு கீழே, இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒன்று சென்ட்ரலை நோக்கியும், மற்றொன்று அண்ணா சாலை நோக்கியும் செல்கிறது. இந்த பணியின் காரணமாகவும், சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் அதிவேக அழுத்தம் காரணமாகவும், 50 மீட்டர் ஆழத்திலிருந்த மணல் மேலே பொங்கி வந்துள்ளது.

தொடரும் சம்பவம்! : மெட்ரோ பணிகளால், சென்னையின் பல இடங்களில் வினோதமான சம்பவங்கள் நடக்கின்றன. ஏற்கனவே, சென்னை உயர் நீதிமன்றம் அருகில், சாலையில் அடிக்கடி பள்ளம் ஏற்பட்டது. சென்னை அரசு மருத்துவமனை மற்றும் ஈவ்னிங் பஜார் சாலை சந்திப்பில், திடீர் பள்ளம் ஏற்பட்டு, அந்த இடத்தில் நிரந்தரமாக தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. சிந்தாதிரிப்பேட்டையில், மூன்று மாடி கட்டடமே பூமிக்குள் இறங்கியது. தற்போது, அரசு பள்ளி வளாகத்தில் மணல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022