மெட்ரிக் - ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு ஒரே நிர்வாகம்
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் உட்பட, 11 வகை பள்ளி நிர்வாக விதிகள், தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தில் இணைக்கப்பட உள்ளன; இதற்கான வரைவு அறிக்கை தயாராகியுள்ளது.
நாட்டிலுள்ள எந்த மாநிலத்தி லும் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டுமே பல வகையான பாடத்திட்டங்களும், கல்வி நிறுவன விதிகளும் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியில், சென்னை கல்வி சட்டம் உருவாக்கப்பட்டது; அதில் பல வகையான விதிகள் உள்ளன.
மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், தொடக்கப் பள்ளி, நர்சரி பள்ளி, பிரைமரி பள்ளி, தனியார் சுயநிதி பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, பாதி அரசு உதவி பெறும் பள்ளி என, மொத்தம், 11 நிர்வாக விதிமுறைகளில், பள்ளிகள் இயங்குகின்றன.
பல பாடத்திட்டங்களை, இந்த பள்ளிகள் பின்பற்றிய நிலையில், 2011ல், அனைத்து பாடத்திட்டங்களும் இணைக்கப்பட்டு, சமச்சீர் கல்வி அறிமுகமானது; ஆனாலும், பள்ளிகளின் விதிகள் மாற்றப்படவில்லை. இந்நிலையில், பா.ம.க., தொடர்ந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், ஒருங்கிணைந்த விதிகளை உருவாக்க உத்தரவிட்டது. இதற்காக, மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் துணை வேந்தர் ஆளுடையபிள்ளை தலைமையில், பள்ளிக் கல்வி செயலர், சட்டத்துறை செயலர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, இரண்டு முறை கூடி ஆலோசனை நடத்தி, 11 வகை விதிகளை ஒன்றாக இணைக்க முடிவு செய்தது. இப்போது, முதல்கட்ட வரைவு அறிக்கை தயாராகி உள்ளது. அதை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அவற்றில் சில மாற்றங்களை செய்து, பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துக்களை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆறு மாதங்களில், இந்த பணியை முடிக்க,
அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.