பெண்களே பேஸ்புக் தேவையா ?
சமீபத்தில் சமூக வலை தளங்கள் மூலம் நட்பு என்ற போர்வையில் பல்வேறு இன்னல்கள் வருவதால் பெண்கள் பலரும் பேஸ்புக்கில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு வரும் பிரச்னைகள் குறிப்பாக சமூகவலை தளங்கள் மூலம் அதிகமாக உள்ளது. சென்னையில் சுவாதி கொலை கூட பேஸ்புக் நண்பர்கள் மூலம் ராம்குமாருக்கு சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சுவாதி, ராம்குமார் இடையே ஏற்பட்ட பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் பழக்கம்தான் கொலை வரை சென்றுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் சேலத்தில் விணுப்பிரியா தற்கொலை செய்வதற்கு காரணமாக இருந்ததும் பேஸ்புக் சமூகவலைளதளமே. இதன் மூலம் பெற்ற விணுப்பிரியாவின் உருவ படத்தை மார்பிங் செய்து வெளியிட்டார் ஒருவர். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இது போல் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை, பெண்கள் எதிரான பேச்சுக்கள், தேவையில்லாமல் முன் பின் அறியாத நபர்களிடம் நட்பு ஏற்படுவது ஆகியன சமூக வலை தளங்கள் மூலம் ஏற்படுகிறது. இதனால் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளிடம் சமூக வலை தளங்கள் மூலம் வரும் ஆபத்தை எடுத்து கூறி வருகின்றனர். மேலும் பேஸ்புக், சாட்டிங், வாட்ஸ்அப் ஆகிவற்றில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்த துவங்கியுள்ளனர். இதனால் இளம் பெண்கள் , மாணவிகள் பலர் பேஸ் புக்கை டீ ஆக்டிவேட் செய்ய துவங்கியுள்ளனர். பெற்றோர்களும் தங்களின் பெண் குழந்தைகளை கவனமாக பார்க்க வேண்டும் என்ற அக்கறைக்கு வந்து விட்டனர்.
இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத வாசகி ஒருவர் கூறுகையில்: " ஆமாம் எனது பெற்றோர்கள் நெட் கனெக்சன், பேஸ் புக் என்றாலே மிகவும் பயப்படுகின்றனர். தேவையற்ற பிரச்னைகள் வரும் என்பதால் நானும் இதில் இருந்து வெளியேற முடிவு செய்து விட்டேன்" என்றார்.
மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் கூறுகையில்: ஆமாம், பேஸ்புக்கில் பெண்கள் குறித்து யாராவது வேண்டாதவர்கள் தவறாக தகவல் போட்டு கேலி செய்கின்றனர். இது மனதை புண்படுத்துகிறது. இதனால் நான் பேஸ்புக்கில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.