கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சேவைகளை கட்செவி அஞ்சலில் பெறும் வசதி
கடவுச்சீட்டு சேவைகளை கட்செவி அஞ்சலில் பெறும் வசதி:முதன் முறையாக மதுரையில் அறிமுகம்
கடவுச்சீட்டு சேவையைக் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்) பெறும் வசதியை நாட்டிலேயே முதல்முறையாக மதுரை
மண்டல கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது.
கடவுச்சீட்டு சேவை மையங்களில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தது முதல் ஒவ்வொரு பரிசீலனை நிலையிலும் விண்ணப்பதாரர்களுக்கு குறுந்தகவல் அனுப்பிவைக்கப்படுகிறது. மேலும், பரிசீலனை நிலையை தொலைபேசி, மின்னஞ்சல், இணையதளம், முகநூல், சுட்டுரை (டுவிட்டர்) மூலமாகத் தெரிந்து கொள்ளும் வசதி ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கிறது. கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பான புகார்கள், குறைகளும் இதில் பெறப்படுகின்றன. இப்போது இந்த சேவைகளைக் கட்செவி அஞ்சலிலும் பெறும் வசதியை மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து மண்டல கடவுச்சீட்டு அலுவலர் எஸ்.மணிஸ்வர ராஜா செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இந்த சேவையைப் பெற பிரத்யேக செல்லிடப்பேசி எண்ணில் 88701 31225 விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொள்ளலாம்.
கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் குறிப்பிட்ட அவரவர் செல்லிடப் பேசி மூலமாகவே மேற்குறிப்பிட்ட பிரத்யேக எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். கட்செவி அஞ்சலில், தங்களது சந்தேகங்கள், குறைகள், புகார்கள் சுருக்கமாக அனுப்ப வேண்டும். அதில் பெயர், பிறந்த தேதி, கடவுச்சீட்டு விண்ணப்ப எண் ஆகியன இடம்பெறுவது அவசியம். கட்செவி அஞ்சலில் தமிழிலும் தகவல்களை அனுப்பலாம். ஆனால், பதில் ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்பி வைக்கப்படும். கட்செவி அஞ்சல் எண்ணுக்கு வரும் அழைப்புகள் ஏற்கப்படமாட்டாது.
அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ.சேவை மையங்களில் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகிறது. மதுரை கோச்சடை மற்றும் திருநெல்வேலியில் செயல்படும் கடவுச்சீட்டு சேவை மையங்களில், கேபிள் டிவி நிறுவனம் மூலமாக இ.சேவை மையங்கள் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.