பாரதியார் பல்கலைக்கழக பிஎச்.டி., எம்.ஃபில். நுழைவுத் தேர்வு: தேர்வு மையங்கள் அறிவிப்பு.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்வு
மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் துறைகளிலும், பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகளில் (முழு நேரம், பகுதி நேரம்) சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஜூலை 17-ஆம் தேதி காலை 11 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக கோவை மாவட்டத்தில் எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி, ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி, திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி, உடுமலைப்பேட்டை கமலம் கலை, அறிவியல் கல்லூரி, உதகை, ஈரோடு மாவட்டங்களுக்கு ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 4,757 பேருக்கு நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் தேர்வு எழுதுபவர்களின் விவரம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 16-ஆம் தேதி வரையிலும் அனுமதிக் கடிதம் கிடைக்காதவர்கள் தேர்வு நாளன்று சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்குச் சென்று, விண்ணப்பத்தின் நகல், புகைப்படம், இறுதியாக படித்த கல்வி நிறுவனம் வழங்கிய புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை அல்லது மத்திய, மாநில அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டையைக் காண்பித்து அனுமதிக் கடிதத்தைப் பெறலாம். மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு 0422-2428318, 90254 68570 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) குழந்தைவேலு தெரிவித்துள்ளார்.